மீனவர்களுக்கு கடற்படை சொன்ன அறிவுரை!

இராமேசுவரம் மீனவர்களுக்கு கடற்படை அறிவுறுத்தல்
இராமேசுவரம் மீனவர்களுக்கு கடற்படை அறிவுறுத்தல்
Published on

இலங்கை - தமிழக கடற்பரப்புகளுக்கு இடையிலான மீன்பிடி பிரச்னையில் இந்த முறை கடற்படை களத்தில் இறங்கியுள்ளது.

மீன் பிடித் தடை காலம் முடிந்ததும் கடந்த ஜூன் 15ஆம் தேதி முதல் இராமேசுவரம் பகுதி மீனவர்கள் இலங்கையை ஒட்டிய கடற்பரப்புக்குள் மீன்பிடித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த இரண்டு மாதங்களில் அத்துமீறி இலங்கைக் கடற்பரப்புக்குள் சென்று தமிழக மீனவர்கள் மீன்பிடித்ததாக இலங்கைத் தரப்பு நடவடிக்கைகளில் இறங்கியது. இந்தக் காலகட்டத்தில் மட்டும் அத்துமிறி தங்கள் கடலுக்குள் வந்து மீன்பிடியில் ஈடுபட்டதாக, தமிழக மீனவர்கள் 122 பேரைக் கைதுசெய்ததுடன், 11 விசைப்படகுகளையும் 8 நாட்டுப் படகுகளையும் இலங்கை கடற்படையினர் கைப்பற்றினர்.

கடந்த ஜூலை 31ஆம் தேதி இலங்கைக் கடற்படையின் படகு மோதியதில் இராமேசுவரம் மீனவர் 59 வயது மலைச்சாமி உயிரிழந்தார்.

இராமச்சந்திரன் (64) என்ற மீனவரைக் காணவில்லை.

இந்த நிலையில், இராமேசுவரம் வேர்கோட்டில் நேற்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் கலந்துரையாடல் நடைபெற்றது. இராமேசுவரம், தனுஷ்கோடி, தங்கச்சிமடம், பாம்பன் பகுதிகளின் விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்கள், இராமேசுவரம் பகுதி கடற்படை நிலைய கட்டளைத் தளபதி விஜய்குமார் நார்வால், மீன்வளத் துறை, சுங்கத்துறை, காவல்துறை அதிகாரிகள், நகராட்சித் தலைவர் நாசர்கான், விசைப்படகு, மீனவர் தரப்பில் போஸ், சகாயம், எமரிட், கார்ல் மார்க்ஸ் ஆகியோரும் பங்கேற்றனர்.

அப்போது, “ சர்வதேசக் கடல் எல்லையைத் தாண்டி மீனவர்கள் செல்லும்போது அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க, எல்லையை மீறிச் செல்லக்கூடாது. ஆதார் அட்டை, மீனவர் அடையாள அட்டை ஆகியவற்றையும் மீனவர்கள் எடுத்துச்செல்ல வேண்டும். மீன்பிடி அனுமதி டோக்கனையும் உடன் வைத்திருக்கவேண்டும்.” என்று கடற்படை அதிகாரிகள் அறிவுறுத்தினார்கள்.

மீனவர்கள் தரப்பிலோ,” ஒரு நாள் அனுமதிச் சீட்டுக்குப் பதிலாக தங்குகடல் அனுமதிச் சீட்டு வழங்கவேண்டும். இதனால் எல்லைதாண்டாமல் நமது கடற்பரப்புக்கு உள்ளேயே மீன்பிடிக்க வசதியாக இருக்கும்.”என்று வலியுறுத்தினர்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com