NDA கூட்டணி வெல்லும் - பியூஸ் கோயல் நம்பிக்கை!

இபிஎஸ் - பியூஸ் கோயல் சந்திப்பு
இபிஎஸ் - பியூஸ் கோயல் சந்திப்பு
Published on

தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி வெல்லும் என மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கூறியுள்ளார்.

மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் , தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோருக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி காலை உணவு விருந்து அளித்தார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் இந்த உணவு விருந்து அளிக்கப்பட்டது. இதன் பின்னர் எடப்பாடி பழனிசாமியும், பியூஸ் கோயலும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கூறியதாவது, “எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் காலை உணவு அருந்தினேன். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வரும். தமிழக நலனுக்காக திமுக அரசு எதுவும் செய்யவில்லை. ஊழல் நிறைந்த திமுக ஆட்சியை முழுமையாக வீழ்த்தி என்.டி.ஏ. கூட்டணி ஆட்சிக்கு வரும். எடப்பாடி பழனிசாமி என்னுடைய நீண்டகால நண்பர். தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்திற்கான சிறந்த எதிர்கால வளர்ச்சியை கொண்டு வரும்.நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு உள்ளான துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதவி விலக வேண்டும். திமுக ஆட்சியில் பெண்கள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.” என்றார்.

இதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி பேசியதாவது; ”பிரதமர் மோடி தலைமையில் நாளை நடைபெறவுள்ள கூட்டம் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும். நாளை நடைபெறும் கூட்டத்தில் 5 லட்சம் பேர் பங்கேற்பார்கள். இந்த தொடக்கம் எங்கள் கூட்டணியின் வெற்றிக்கு அச்சாணியாக விளங்கும்.

தமிழகத்தில் பொதுமக்கள், பெண்களுக்கு பாதுகாப்பில்லாத ஆட்சி தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பல துறைகளில் ஊழல் நடந்துள்ளது. இந்த அரசு எல்லா துறைகளிலும் தோல்வியடைந்துள்ளது. சட்டம், ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது.

மேக் இன் இந்தியா திட்டத்தை உருவாக்கி, இந்தியாவை வல்லரசு நாடாக மாற்றும் பணியில் பிரதமர் ஈடுபட்டு வருகிறார். எங்கள் கூட்டணி வலிமையான கூட்டணி. வலிமையான கூட்டணியாக விளங்கும் தேசிய ஜனநாயக கூட்டணி, வரும் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறும். தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமையும். அப்போது தமிழகம் இதுவரை இல்லாத வளர்ச்சியை அடையும்.” இவ்வாறு அவர் கூறினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com