மத்திய உள்துறையின் கட்டுப்பாட்டில் தமிழக ஆட்சியா?- நெடுமாறன் கண்டனம்

Nedumaran
பழ. நெடுமாறன்
Published on: 

ஒன்றிய உள்துறையின் கட்டுப்பாட்டில் தமிழக ஆட்சியா எனக் கேட்டு தமிழர் தேசிய முன்னணியின் நிறுவனர் பழ. நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார். 

”தேர்தலுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை தலைமை இயக்குநர் ஆகியோரை திடீரென மாற்றி புதியவர்களைத் தேர்தல் ஆணையம் நியமித்திருக்கிறது. இதுவரை நடைபெற்ற பொதுத் தேர்தல்கள் எதிலும் இவ்வாறு செய்யப்பட்டதில்லை.” என இன்றைய அறிக்கை ஒன்றில் அவர் கூறியுள்ளார். 

”மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் சிலர் மாற்றப்படுவது வழக்கம். ஆனால், அரசின் தலைமைச் செயலாளரும், தலைமை காவல் இயக்குநரும் மாற்றப்பட்டிருப்பதின் மூலம் உண்மையில் தேர்தல் ஆணையத்தின் மூலமாக ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சுத்துறை தமிழக அரசின் நிர்வாகத்தை நேரடியாகத் தனது கரங்களில் எடுத்துக்கொண்டுள்ளது என்பது அம்பலமாகியுள்ளது.

அண்மையில் தேர்தல் நடந்து முடிந்த அசாம், பீகார் போன்ற மாநிலங்களில் இவ்வாறு எதுவும் செய்யப்படவில்லை. தமிழ்நாட்டிலும், மேற்கு வங்கத்திலும் மட்டுமே அரசின் மிகுந்த உயர் அதிகாரிகள் மாற்றப்பட்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டிலும் மேற்கு வங்கத்திலும் நடைபெறவிருக்கும் தேர்தல்கள் முறையாக நடத்தப்படுமா? அல்லது முறைகேடான வழிகளில் நடத்தப்படுமா? என்ற ஐயம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த முறைகேடான நடவடிக்கைகளை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். ” என்றும் நெடுமாறன் கூறியுள்ளார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com