நீட் தேர்வு (மாதிரி படம்)
நீட் தேர்வு (மாதிரி படம்)

‘நீட்: மறு தேர்வு வேண்டும்! எழுபதாயிரம் பேருக்கு மேல் வினாத்தாள் கசிந்துள்ளது’

இந்த ஆண்டு நீட் தேர்வு முடிவுகள் வெளியானதிலிருந்தே பல குழப்பங்கள். இதற்கு எதிரான போராட்டம் நாடு முழுவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் நீட் தேர்வு முடிவுகள் குறித்த கேள்விகளை சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் போட்டித் தேர்வுகளுக்குப் பயிற்சி அளிக்கும் ஆர்.ஜி.ஆர். அகடாமியின் நிறுவனர் ஆர். கோவிந்தராஜிடம் முன்வைத்தோம்.

இந்த ஆண்டு 67 மாணவர்கள் 720-க்கு 720 எடுத்த காரணத்தினால் தான் நீட் தேர்வு முடிவுகளை மக்கள் சந்தேகப்படுகிறார்களா?

சந்தேகம் சரிதான். 67 மாணவர்கள் 720க்கு 720 எடுப்பதற்கு சாத்தியம் இல்லை. ஒரு மாணவருக்கு சொல்லிக் கொடுத்து, அவரை 600லிருந்து 680 மதிப்பெண் எடுக்க வைக்க நிறைய சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. 600-க்கு மேல் எடுப்பதே சவால். ஆனால், 67 மாணவர்கள் 720 எடுத்தது, கருணை மதிப்பெண் வழங்கியது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

 நீட் தேர்வுக்கு எதிரான மாணவர்களின் போராட்டத்தை நீங்க எப்படி பார்க்கிறீர்கள்?

படித்துத் தேர்வு எழுதுகின்ற மாணவருக்குத்தான் தெரியும் அதனுடைய வலி. அதனால், போராடுவதில் தவறு இல்லை.

நீட் தேர்வு முறை (NEET policy) கருணை மதிப்பெண் வழங்க இடம் கொடுக்கிறதா?

நீட் விண்ணப்பத்தில் இது தொடர்பான எந்த அறிவுறுத்தலும் வழங்கப்படவில்லை. நீட் தேர்வுக்கு கருணை மதிப்பெண் கொடுக்கின்றோம் என்ற அறிவுறுத்தலும் இல்லை. கருணை மதிப்பெண் தொடர்பாக முன்னரே  prospectus இல் கொடுத்திருக்க வேண்டும். ஆனால், அப்படிக் கொடுக்கப்படவில்லை.

ஆர். கோவிந்தராஜ், ஆர்ஜிஆர் அகாடமி
ஆர். கோவிந்தராஜ், ஆர்ஜிஆர் அகாடமி

மறுதேர்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை சரிதானா?

கருணை மதிப்பெண் வழங்கப்பட்டு, பின்னர் அது ரத்து செய்யப்பட்டு, மறுதேர்வு நடத்தப்படும் என்று சொல்லியிருக்கிறார்கள். வெளியான வினாத்தாளை வைத்து ஒரு மாணவர் மட்டும்தான் தேர்வு எழுதியிருக்கிறாரா என்றால் இல்லை. அது, சமூக ஊடகங்கள் வழியாக பலருக்கும் பரவியிருக்க வாய்ப்புகள் இருக்கிறது.

67 மாணவர்கள் 720க்கு 720 எடுத்திருப்பது, மூன்றாயிரம் மாணவர்கள் 700க்கு மேல் எடுத்திருப்பது, எண்பதாயிரம் மாணவர்கள் 600க்கு மேல் எடுத்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. மறுதேர்வு வைத்தால் நல்லதுதான்.

வினாத்தாள் கசிவால் யார் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று நமக்குத் தெரியாதே. கசிந்த வினாத்தாள் 70 ஆயிரம் பேருக்கு மேல் சென்றிருப்பதாக நிறைய பேர் கூறுகின்றனர். அதனால், மறுதேர்வு நடத்துவது நியாயம்தான்.

நீட் தேர்வில் முறைகேடு நடந்ததை அரசு ஒத்துக் கொள்கிறதா? இதில் அரசின் நிலைப்பாடு என்ன?

நீட் தேர்வில் தவறு எதுவும் நடக்கவில்லை என முதலில் மத்திய அரசு சொன்னது. பின்னர் கல்வித்துறை அமைச்சர், சுகாதாரத்துறை அமைச்சர் இருவரும், தேர்வில் முறைகேடு நடந்திருக்க வாய்ப்பு இருக்கிறது எனச் சந்தேகித்தனர். அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என சொல்லியிருக்கிறார்கள். அப்படியென்றால் ஏதோ முறைகேடு நடந்திருக்கிறது என்றுதான் அர்த்தம். இதை மத்திய அரசும் ஒத்துக் கொண்டுள்ளது.

நீட் தேர்வில் நடந்துள்ள முறைகேட்டை தேசிய தேர்வு முகமை எப்படிப் பார்க்கிறது?

தேசிய தேர்வு முகமை இதுவரை தவறே நடக்கவில்லை என்கிறது. இது எந்தளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.

நீட் போன்ற மையப்படுத்தப்பட்ட தேர்வுக்கு மாற்றாக வேறு ஏதேனும் தேர்வு முறையைப் பற்றி முடிவெடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதா?

தேர்வு முறையாக நடத்த வேண்டும். தவறுகளைக் கலந்து, எல்லாவற்றையும் முறைப்படுத்த வேண்டும். தேர்வு வேண்டாம் என சொல்லத் தேவையில்லை.

நீட் தேர்வுக்குத் தயாராகின்ற தமிழ்நாட்டு மாணவர்களுக்கு அரசு சில முன் முயற்சிகளை எடுக்க வேண்டும். நீட் வேண்டாம் என்று சொல்லுகின்ற அரசு, 11 - 12ஆம் வகுப்பு பாடத்திட்டத்தை நீட் தேர்வு, ஜே.இ.இ. போன்ற தேர்வுகளை எழுதுவதற்கு ஏற்ற மாதிரி வடிவமைக்கலாம். அத்துடன் நம்முடைய தேர்வு முறைகளையும் நீட் தேர்வு அளவுக்கு கொண்டு வந்துவிட்டார்கள் என்றால், அருமையான தீர்வு கிடைக்கும். அதற்கு முதலில் ஆசிரியர்களுக்குப் பயிற்சி கொடுத்தால், மாணவர்களை அவர்களே தயார்ப்படுத்தி விடுவார்கள். அதற்குத் தனியாகப் பயிற்சி மையங்கள் தேவைப்படாது.

நீட் தேர்வு, கியூட் தேர்வு, க்ளாட் போன்ற தேர்வுகளை எழுதுவதற்கு மாணவர்களை பள்ளியிலேயே தயார்ப்படுத்த வேண்டும். நம்முடைய கற்பித்தல் முறையையும், தேர்வு முறையையும் சீர்படுத்த வேண்டும். அப்படிச் செய்தால், இதற்கான தீர்வு கிடைக்கும்.

நீட் தேர்வு ஏழை எளிய மாணவர்களுக்கும் சமூகநீதிக்கும் எதிரானது என தமிழக அரசு கூறுவதை எப்படி பார்ப்பது?

இதை ஒத்துக் கொள்ள முடியாது. யாருக்குப் படிக்கத் திறமை இருக்கிறதோ, படித்ததைப் புரிந்து கொண்டு, யாரால் சிறப்பாக வெளிப்படுத்த முடிகிறதோ அவர்கள் வெற்றி பெறுகிறார்கள். இதற்குக் கொஞ்சம் பயிற்சிகள் தேவை அவ்வளவுதான். இதற்கான முயற்சிகளை அரசு செய்ய வேண்டும்.

ஏழை எளிய மாணவர்களுக்குத்தான் அரசுப் பள்ளியிலேயே நீட் தேர்வுக்கு பயிற்சிக் கொடுக்கிறார்களே. அப்படி இருந்தும் எழை எளிய மாணவர்கள் ஏன் பாதிக்கப்படுகிறார்கள்?

அரசுப் பள்ளியில் படிக்கும் ஏழை எளிய மாணவர்களு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு இருக்கிறது, கட்டணமும் அரசே கட்டுகிறது. தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தாலும், அரசுதானே கட்டணம் செலுத்துகிறது.

அரசுப் பள்ளியில் படித்தால்தான் அரசு எல்லாவற்றையும் இலவசமாக கொடுக்கிறதே. பிறகு எங்கு ஏழை – எளிய மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்?

நீட் தேர்வால் சமநிலை, சமூக நீதி, ஏழை – எளிய மாணவர்கள் பாதிக்கப்படுவதாக சொல்வது தவறான கருத்து. 

logo
Andhimazhai
www.andhimazhai.com