பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் நியமனம்? சட்ட சிக்கல்கள் வருமா?

ஜி.வெங்கட்ராமன் ஐபிஎஸ்
ஜி.வெங்கட்ராமன் ஐபிஎஸ்
Published on

தமிழக காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் வரும் 31 ஆம் தேதியுடன்  ஓய்வு பெறும் நிலையில் புதிய டிஜிபியாக வெங்கட்ராமன் நியமிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

வழக்கமாக டிஜிபி நியமிக்கப்படவேண்டும் என்றால் 3 மாதத்துக்கு முன்னரே அதற்குத் தகுதியான, அதாவது 30 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றவர்கள் பட்டியலை ஒன்றிய உள்துறைக்கு அனுப்பவேண்டும். ஆய்வுக்குப் பின்னால் மத்திய அரசு தேர்வாணையத்துக்கு அது அனுப்பப்பட்டு அதிலிருந்து தகுதியான மூவரை ஆலோசனைக்குப் பின்னால் தமிழக அரசுக்குப் பரிந்துரைக்கும். அதில் ஒருவரை தமிழக அரசு தேர்வு செய்யும்.

 மாநிலங்களில் டிஜிபி நியமனத்தில் குளறுபடிகள் இருந்ததால் உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் இதுதொடர்பான வழக்கு ஒன்றில் மேற்கண்டவாறு வழங்கப்பட்டது.

ஆனால் தற்சமயம் அப்படி சீனியர் அதிகாரிகள் பட்டியல் மத்திய அரசுக்கு அனுப்பப்படவில்லை. அப்படி அனுப்பி இருந்தால் சீமா அகர்வால், ராஜீவ்குமார், சந்தீப் ராய் ரத்தோர் ஆகிய மூவரில் ஒருவரைத் தேர்வு செய்ய நேர்ந்திருக்கலாம். ஆனால் இம்மூவருக்கும் சட்டம் ஒழுங்கு அனுபவம் இல்லை என்பது தமிழக அரசின் சார்பில் குறையாகக் கருதப்பட்டதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில் உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களைப் புறந்தள்ளி பொறுப்பு டிஜிபியாக சீனியாரிட்டியில் ஆறாவது இடத்தில் இருக்கும் ஜி.வெங்கட்ராமன் அறிவிக்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது.

பொறுப்பு டிஜிபியாக அறிவிப்பதற்கு சட்ட சிக்கல்கள் ஏற்படக்கூடும். அப்படி ஏற்பட்டால் உத்தரபிரதேச மாநிலத்தில் டிஜிபி நியமனத்தில் உச்சநீதிமன்ற வழிகாட்டுதலை ஏற்க மறுத்து பொறுப்பு டிஜிபி நியமிக்கப்பட்டிருப்பதையும் குஜராத்தில் தற்போதைய டிஜிபிக்கே பதவி நீட்டிப்பு கொடுத்திருப்பதையும் உதாரணம் காட்டும்  மாநில அரசு என சொல்லப்படுகிறது. உபியில் தொடர்ச்சியாக ஐந்தாவது முறையாக பொறுப்பு டிஜிபி தான் நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய அரசுடன் கருத்துவேறுபாடு நிலவுவதால் யோகி தலைமையிலான பாஜக அரசு, இதற்காக தனி வழிமுறைகளைக் கொண்டுவந்து பின் பற்றுவது குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே டிஜிபி நியமனம் பற்றி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, அந்த வழக்கு தமிழக அரசு நியமன வழிமுறைகளைப் பின்பற்றும் எனக் கூறியதால் முடித்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

புதிய டிஜிபியாக அறிவிக்கப்பட இருக்கும் ஜி.வெங்கட்ராமன், நாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர். 1994-இல் ஐபிஎஸ் ஆனவர். சட்டம் ஒழுங்கு, சைபர் கிரைம் கண்காணிப்பு போன்றவற்றில் நல்ல அனுபவம் பெற்றவர் எனக் கருதப்படுகிறது. நேர்மையான அதிகாரியாக இருந்தாலும் கூட இவரது நியமனம் சட்டச் சிக்கலுக்கு உள்ளாகுமா என்ற கேள்வி பல மட்டங்களில் எழுந்துள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com