சென்னை மெட்ரோ இரயில் பயண இணைப்பை வலுப்படுத்துவதற்காக மின்சார மினி சிற்றுந்துகளை அறிமுகப்படுத்துகிறது சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம்.
பெரிய மின்சாரப் பேருந்துகள் இயக்க சவாலாக உள்ள இடங்களில் இந்தச் சிற்றுந்துகள் அறிமுகம் செய்யப்படும். மெட்ரோ நிலையங்கள், குறுகிய தெருக்களில் உள்ள குடியிருப்புகள் ஆகியவற்றை இணைக்கும் வகையில் இந்தச் சிற்றுந்துகள் இயக்கப்படும்.
இச்சிற்றுந்துகள் 20 - 30 பயணிகள் வரை பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்படுகிறது. இதில், ஏறுவதற்கு வசதியாக தாழ்வான நுழைவாயில், சக்கர நாற்காலி பயன்படுத்தும் வசதி, சிசிடிவி கேமரா, நிகழ்நேரப் பயணிகள் தகவல் அமைப்புகள், மொபைல் சார்ஜிங் பாயிண்டுகள் ஆகிய நவீன அம்சங்களுடன் வடிவமைக்கப்படுகிறது.
பயணிகள் பாதுகாப்பாகவும், நவீனமாகவும் வசதியாக இச்சிற்றுந்துகளில் பயணிக்க முடியும்.
சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் கட்டுப்படுத்த உதவுவதுடன், போக்குவரத்து நெரிசலையும் இவை குறைக்கும் என எதிர்பா்க்கப்படுகிறது.