மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்- விஜய் அறிவிப்பு!

New Motor Sports City
புதிய மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்
Published on

சட்டப்பேரவையில் துறைவாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

இன்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் 110 விதியின் கீழ் மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் அமைப்பது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். 

அந்த அறிவிப்பு விவரம்:

"இருசக்கர, நான்கு சக்கர வாகன உற்பத்தியில் தமிழ்நாடு ஒரு முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது.  பல்வேறு வாகன உற்பத்தி நிறுவனங்கள், தங்களது புதிய வாகனத் தொழிற்சாலைகளை நிறுவுவதற்கு தமிழ்நாட்டினை, முதன்மை விருப்பமாகக் கருதுகின்றன. 

இந்தியாவில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் வாகன உற்பத்தியில், தமிழ்நாடு ஒரு முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது.  இந்த மோட்டார் ஸ்போர்ட்ஸ் உற்பத்திப் பிரிவுகள் கோயம்புத்தூரில் இயங்கி வருகிறது. 

மெட்ராஸ் இண்டர்நேஷனல் சர்க்யூட் சென்னைக்கு அருகில் இருங்காட்டுக்கோட்டையிலும், காரி மோட்டார் ஸ்பீட்வே கோயம்புத்தூரிலும், மோட்டார் பந்தயத்திற்கான முக்கியக் கட்டமைப்புகளாக உள்ளன.  இந்தப் பந்தய அரங்குகளில், தேசிய அளவிலான கார் பந்தயப் போட்டிகள் நடைபெறுகிறது.  தற்போது மோட்டார் வாகனப் பந்தயத்திலும் தமிழ்நாடு முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது. 

தமிழ்நாட்டில் உலக அளவிலான மோட்டார் வாகன கார் பந்தய விளையாட்டுப் போட்டிகளுக்கான கார் உற்பத்தி ஆலைகளையும், அதற்குத் தேவையான உப தொழிற்சாலைகளையும் அமைக்கத் தேவையான சூழல் உள்ளது. 

உலகத்தரம் வாய்ந்த மோட்டார் வாகன கார் பந்தய அரங்குகளை அமைப்பதன்மூலம்,  சுற்றுலா, சிறப்பு வாகன உற்பத்தித் தொழிற்சாலைகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம் மேம்பட வாய்ப்புகள் உள்ளது.

விளையாட்டுச் சுற்றுலாவை மேம்படுத்தவும், தமிழ்நாட்டு இளைஞர்களிடையே மோட்டார் ஸ்போர்ட்ஸ் மீதான அதிகரித்துவரும் ஆர்வத்தை ஊக்குவித்து, அவர்களுக்குத் தேவையான பயிற்சிகள் வழங்கி தமிழ்நாட்டை சர்வதேச அளவிலான மோட்டார் ஸ்போர்ட்ஸின் முக்கிய மையமாக உருவாக்கவும், தமிழ்நாட்டில் ஒரு புதிய மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் உருவாக்கப்படும்.

இந்த நகரத்தில் சர்வதேசத் தரத்திலான மோட்டார் ஸ்போர்ட்ஸ் பந்தயத்தடம், அதற்கான நவீன உட்கட்டமைப்பு வசதிகள், பயிற்சி வசதிகள் ஏற்படுத்தப்பட்டு சர்வதேசத் தரத்திலான போட்டிகள் நடத்துவதற்கான கட்டமைப்புகள் உருவாக்கப்படும்.

இளைஞர்களின் மோட்டார் ஸ்போர்ட்ஸ் திறமைகளைக் கண்டறிந்து, பயிற்சி, போட்டி வாய்ப்புகள் வழங்கி, தேசிய, சர்வதேச அளவிலான வீரர்களை உருவாக்குவதுடன், விளையாட்டுச் சுற்றுலாவையும் மேம்படுத்தும் வகையில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் அமையும்.” என்று முதலமைச்சர் விஜய் கூறினார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com