
நீலகிரி மாவட்டத்தில் நேற்று முழுவதும் விடிய விடிய மழை பெய்து, மாவட்டத்தையே கலக்கியெடுத்துள்ளது.
மேட்டுப்பாளையம் - உதகை மலைச் சாலையில் ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட்டு சாலைகள் காணாமல்போயின.
மலைச்சரிவில் சிக்கிய அரசுப் பேருந்து கவிழுந்து விபத்துக்கு உள்ளானது. இதில் சிக்கி அந்தப் பேருந்தின் ஓட்டுநர் உயிரிழந்தார். நடத்துநருடன் எட்டு பயணிகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
குன்னூரில் கனமழை பெய்து ஆற்றில் வெள்ளம் ஓடியபடி இருக்கிறது. ஆற்றங்கரையோரம் உள்ள வீடுகளில் வெள்ள நீர் புகுந்து கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாவட்டத்தில் பர்லியார் பகுதி அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 7 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் இங்கு 25 செ.மீ. அளவுக்கு மழைப் பொழிவு இருந்தது. கீழ்கோத்தகிரியில் 20 செ.மீ., குன்னூர் எடப்பள்ளியில் 16.1 செ.மீ., கோத்தகிரியில் 13.7 செ.மீ., கூடலூர் வட்டம் ஓ வேலி, தேவாலா, கோத்தகிரி வட்டம் கோடநாடு, குன்னூர் ஊரகம், குன்னூர், குந்தா வட்டம் கெட்டாய், குந்தா ஆகிய பகுதிகளில் அதிக கனமழை பெய்தது.