சென்னையை ஒட்டிய கோவளம் கடற்கரைப் பகுதியில் மீண்டும் ஹெலிகாப்டர் சவாரி தொடங்கப்பட்டுள்ளது. இதனால் நீர்வாழ் உயிரினங்கள், பறவைகளுக்கு ஆபத்து என கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
சென்னையை ஒட்டிய கோவளத்தை மையமாகக் கொண்டு கடந்த நவம்பர் மாதம் ஹெலிகாப்டர் சுற்றுலா சேவை தொடங்கப்பட்டது. கம்போடியாவைச் சேர்ந்த ஏரோடான் சாப்பர் நிறுவனம் தன் இந்திய துணை நிறுவனத்தின் மூலம் இந்த சேவையை நடத்தி வருகிறது. ஹெலிகாப்டரில் பயணிகளை ஏற்றிச் சென்று சென்னையின் முக்கிய இடங்கள், கோவளம், மாமல்லபுரம், கடற்கரை பரப்புகள் ஆகியவற்றை சுற்றிக்காட்டுவது இதில் அடக்கம்.
சுற்றுச்சூழல் காப்பு அமைப்புகள், பா.ம.க. ஆகியவை இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. அதையடுத்து ஹெலிகாப்டர் சவாரி நிறுத்திவைக்கப்பட்டது. இப்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
இவற்றை நினைவூட்டியுள்ள பா.ம.க. தலைவர் அன்புமணி, “ சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் சுற்றுச்சூழலுக்கும், பறவைகள் வருகைக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் ஹெலிகாப்டர் சுற்றுலாத் திட்டத்தை கைவிட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துவரும் நிலையில், அதைப் பொருட்படுத்தாமல் ஹெலிகாப்டர் சேவையை அதிகரிக்க அரசும், தனியார் நிறுவனமும் தீவிரம் காட்டி வருகின்றன. பணக்காரர்களை மகிழ்ச்சிப் படுத்துவதற்கான ஹெலிகாப்டர் சேவைக்காக மீட்க முடியாத சுற்றுச்சூழல் சீரழிவை ஏற்படுத்த தமிழக அரசே துணைபோகிறது.”என கண்டனம் தெரிவித்துள்ளார்.
”இயற்கையின் கொடையாக, உலகப்புகழ் பெற்ற வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு இணையாக சென்னை & கோவளம் பகுதியில் உள்ள முட்டுக்காடு -& கேளம்பாக்கம் உப்பங்கழிக்கு ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கில் வெளிநாட்டு பறவைகள் வந்து செல்கின்றன. கோவளத்திற்கு அருகில் உள்ள பள்ளிக்கரணை சதுப்புநிலம், பெரும்பாக்கம் சதுப்புநிலம், சிறுதாவூர் ஏரி, நன்மங்கலம் காப்புக் காடு ஆகிய பகுதிகளும் அதிக எண்ணிக்கையில் பறவைகள் வலசை வரும் பகுதி ஆகும். இயற்கையாக நமக்கு கிடைத்த இந்த வரத்தை நாம் பாதுகாக்க வேண்டும். ஆனால், ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டம் என்ற பெயரில் இந்த வரத்தை சிதைத்துக் கொண்டிருக்கிறது தமிழக அரசு. இதை அனுமதிக்க முடியாது.
ஹெலிகாப்டர் தாழ்வாக பறப்பதால் ஏற்படும் இரைச்சல் அங்கு வரும் வெளிநாட்டு பறவைகளுக்கு பெரும் இடையூறாக உள்ளன. அதுமட்டுமின்றி, ஒலி மாசு, சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றாலும் கிழக்கு கடற்கரை சாலை பகுதி பாதிக்கப்படும். இதனால், பறவைகள் வருகை முற்றிலுமாக பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது. பள்ளிக்கரணை சதுப்பு நிலம் மற்றும் கிழக்குக் கடற்கரைச்சாலையில் முட்டுக்காடு தொடங்கி அண்மையில் தமிழ்நாட்டின் 18ஆம் ஈரநிலமாக அறிவிக்கப்பட்டுள்ள கழுவேலி பறவைகள் சரணாலயம்வரையிலான பகுதிகளில் லட்சக்கணக்கான வெளிநாட்டுப் பறவைகள் வலசை வருவதால், ஒட்டுமொத்த கிழக்கு கடற்கரை சாலைப் பகுதியையும் பறவைகள் வாழிடமாக அறிவிக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. ஆனால், அந்த நோக்கத்தை சிதைக்கும் வகையில், தனியார் நிறுவனத்தின் லாபத்தைக் கருத்தில் கொண்டு ஹெலிகாப்டர் சேவையை அரசே திணிப்பது சரியல்ல.
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்துக்கு வரும் பறவைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக சரணாலயத்திலிருந்து 5 கி.மீ சுற்றளவில் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், கிட்டத்தட்ட அதேபோல் பாதுகாக்கப்பட வேண்டிய கோவளம் பகுதியில், வெடிகளை விட பல மடங்கு இரைச்சல் எழுப்பும் ஹெலிகாப்டர் சுற்றுலாவை அரசு அனுமதிப்பது ஏற்றுக்கொள்ளவே முடியாதது.” என்றும் அன்புமணியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.