ஓபிஎஸ்ஸுக்கு இல்லை... தளபதிக்குத்தான் ஜெ...!

ஓ. பன்னீர்செல்வம்
ஓ. பன்னீர்செல்வம்
Published on

“நான் இந்நிகழ்ச்சிக்கு வரும்போது சிலர் ஓ.பி.எஸ். வாழ்க வாழ்க எனக் கூறினர். தளபதி வாழ்க என்றுதான் கூறவேண்டும் என்றேன். ஏனெனில் திமுகவில் நான் சாதாரணத் தொண்டன். நான் உழைத்தால்தான் எனக்குப் பதவி.” என்று முன்னாள் முதலமச்சர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் திமுக சார்பில் கோவில்பட்டி - விளாத்திகுளம் சட்டமன்ற திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ‘தமிழ்நாடு தலைகுனியாது’ என்ற தலைப்பில் நடைபெற்றது. இதில் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர் கீதாஜீவன், சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரவீந்திர நாத், கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதில், முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பேசுகையில், “அதிமுகவில் இருந்து அண்ணா ஆரம்பித்த திமுகவில் என்னை இணைத்த தமிழக முதல்வருக்கு எந்நாளும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். இரவு பகல் பாராமல் தமிழக முதல்வர் ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சி நடத்தி வருகிறார். அண்ணா, கருணாநிதி ஆகியோருடன் நல்ல அனுபவம் பெற்றிருக்கிறார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது நான் எதிர்க்கட்சி தலைவராக இருந்தேன். அப்போது என்னிடம் வந்து, ‘நான் திருவாரூர் செல்கிறேன்’ என்று சொல்லிவிட்டு சென்றார். அந்த அளவுக்கு சட்டமன்றத்தின் மாண்பினைக் கடைப்பிடித்தவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. அவரின் வழியில் இன்று முதலமைச்சர் ஸ்டாலினும் அனைவரையும் ஒருங்கிணைத்து நடத்துகிறார்.

திமுக கூட்டணியில் இருந்து இதுவரை யாரும் வெளியே போகவில்லை. நிரந்தரக் கூட்டணியாக உள்ளது. தேமுதிக கூட்டணியில் சேர்ந்துள்ளது. அதிமுக கூட்டணியில் தேமுதிக இருந்தபோது, ராஜ்யசபா உறுப்பினர் தருவதாக ஒப்பந்தம் போடப்பட்டது. அதை எடப்பாடி பழனிசாமி துச்சமாகத் தூக்கியெறிந்தார். ஆனால் திமுக கூட்டணியில் இணைந்தவுடன் ஒப்பந்தம் போடாமலேயே ராஜ்யசபா சீட்டு வழங்கப்பட்டிருக்கிறது. அதுதான் அரசியல் பண்பாடு.

அதிமுக ஆட்சியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த லேப்டாப் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தை 2019இல் எடப்பாடி பழனிசாமி நிறுத்திவிட்டார். அதேபோன்று தாலிக்குத் தங்கம் திட்டத்தையும் அவர் 2019இல் நிறுத்திவிட்டார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொலைநோக்குடன் கொண்டு வந்த பல்வேறு திட்டங்களை எடப்பாடி பழனிசாமி நிறுத்திவிட்டார். தற்போது 10 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் தந்த ஒரே முதலமைச்சர் ஸ்டாலின்.

மத்திய அரசு 40 சதவீதம் நிதி தர வேண்டிய இடத்தில் வெறும் 4 சதவீதம்தான் நிதி தந்துள்ளது. ஆனால் தமிழக முதல்வர் ஸ்டாலின் மாநில நிதியைக் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்திவருகிறார். எவ்வளவு அச்சுறுத்தினாலும் தமிழகம் தலைகுனியாது. இன்றைக்கு உலகத்தை இயக்கிக்கொண்டிருப்பது 9 கோள்கள். அந்த 9 கோள்களில் சக்திவாய்ந்த கோள் சூரியன். அதனால்தான் பேரறிஞர் அண்ணா அந்தக் காலத்திலேயே உதயசூரியன் சின்னத்தைத் தேர்ந்தெடுத்துள்ளார்.

பேரறிஞர் அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, மு.க. ஸ்டாலின் இவர்கள் எல்லாம் மக்களால் ஓட்டுப்போட்டு முதலமைச்சர் ஆனவர்கள். நான் உட்பட மற்றவர்கள் எல்லாம் அப்பாயின்ட்மென்ட்தான். அம்மாவிற்கு (ஜெயலலிதா) சில பிரச்சினைகள் வந்தபோது என்னை முதலமைச்சர் ஆக்கினார்கள். நான் இந்நிகழ்ச்சிக்கு வரும்போது சிலர் ஓ.பி.எஸ். வாழ்க வாழ்க எனக் கூறினர். தளபதி வாழ்க என்றுதான் கூறவேண்டும் என்றேன். ஏனெனில் திமுகவில் நான் சாதாரணத் தொண்டன். நான் உழைத்தால்தான் எனக்குப் பதவி.

பேசு பா... பேசு... நீ எப்படி, யாரால் கட்சிக்கு வந்த? நீ தலைவராக ஏற்றுக் கொண்டிருக்கிற எடப்பாடி பழனிசாமி ஊர்ந்து சென்று சசிகலா காலில் விழுந்து முதலமைச்சர் பதவியேற்றார். அதன் பிறகு அவரைப் பற்றி என்ன சொன்ன? எதையோ பார்த்து எதையோ குரைக்கிறது என்று சொல்கிறார். அப்படி சொல்லலாமா. இந்த உலகத்திலேயே நன்றி கெட்ட அரசியல்வாதி எடப்பாடி பழனிசாமி தான்.

இன்று எனக்கு ஒருவர் எச்சரிக்கை விடுகிறார். அவர் முன்னாள் அமைச்சர் உதயகுமார். எனக்கு அவர் பெயரை சொல்லவே வெட்கமாக இருக்கிறது. பழனிசாமி குறித்து நான் பேசக்கூடாது எனக் எனக்கு எச்சரிக்கை விடுக்கிறார். அதிமுகவை குழிதோண்டிப் புதைத்தது எடப்பாடி பழனிசாமியும், உதயகுமாரும் தான். எனக்கு எச்சரிக்கை விடுக்க உதயகுமாருக்கு என்ன தகுதி இருக்கிறது? எடப்பாடியும், உதயகுமாரும் மண்வெட்டியை எடுத்து அதிமுகவை குழிதோண்டிப் புதைத்துவிட்டார்கள். அதிமுகவை அழித்த வரலாற்றுப் பெருமை எடப்பாடி பழனிசாமி மற்றும் உதயகுமாரையே சாரும். என்னைப் பற்றியோ, நான் நடந்து வந்த அரசியல் பாதையைப் பற்றியோ பேசுவதற்கு அவர்களுக்கு அருகதை இல்லை.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுமாறு என் ஆதரவாளர்கள் என்னை வற்புறுத்தி நிற்கவைத்தனர். அப்போது என்னை வீழ்த்த ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயருடன் 6 பேரை பிடித்து நிற்கவைத்தனர். ஆனால் அதில் அதிமுக டெபாசிட் இழந்தது” என்று காட்டமாகப் பேசினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com