வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன்
வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன்

3 நாள்களில் வடகிழக்குப் பருவ மழை தொடங்கலாம்! - வானிலை மையம்

தென்னிந்தியாவை நோக்கி கிழக்கு- வடகிழக்கு திசைகளிலிருந்து காற்று வீசிவருகிறது; இந்நிலையில் வடகிழக்குப் பருவ மழை அடுத்த மூன்று நாள்களில் தொடங்கக்கூடும் என வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று மதியம் ஊடகத்தினரிடம் இத்தகவலைத் தெரிவித்தார்.

தற்போது அரபிக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலவுகிறது; மற்றொரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வங்கக் கடலில் 21ஆம் தேதி தொடங்கக்கூடும்; இந்த இரண்டின் காரணமாக பருவமழையின் முதல் வாரம் வலுகுறைவாகக் காணப்படும் என்றும் அவர் கூறினார்.

தெற்கு அரபிக்கடல், மைய அரபிக்கடலில் 23ஆம் தேதிவரையிலும், தெற்கு வங்கக் கடல், மைய வங்கக் கடல் பகுதிகளுக்கு 21முதல்23ஆம் தேதிவரை மீனவர் செல்லவேண்டாம் என்றும் வானிலைத் துறை எச்சரித்துள்ளது.

பொதுவாக அக்டோபர் 20ஆம் தேதி வடகிழக்குப் பருவமழை தொடங்கும்; ஒரு வாரம் முன்பின் இருப்பது இயல்பு என்றும் வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறினார்.

தமிழகத்தில் இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை 354 மி.மீ. பதிவாகியுள்ளது; இயல்பு அளவு 328 மி.மீ. இயல்பைவிட 8 சதவீதம் அதிகம்.

வடகிழக்குப் பருவமழையால் பயன்பெறக்கூடிய தமிழகம், கேரளம், தெற்கு கர்நாடகம், தெற்கு ஆந்திரம், ராயலசீமா பகுதிகளைக் கொண்ட தென்னிந்தியப் பகுதிகளில், இயல்பான மழையளவு 33 செ.மீ.; எதிர்பார்ப்பது 29 முதல் 38 செ.மீ.வரை என்றும் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com