தமிழக போலீசார் மீது கற்களை வீசி வன்முறையில் ஈடுபட்ட 29 வடமாநில தொழிலாளர்கள் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளியில் தனியார் கப்பல் கட்டும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இங்கு ஒப்பந்த அடிப்படையில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த அமரேஷ் பிரசாத் (வயது 35) வேலை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு அமரேஷ் பிரசாத், தான் தங்கி இருந்த குடியிருப்பில் உள்ள மாடிக்கு சென்றபோது கால் தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார். சக தொழிலாளர்கள் அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற நிலையில் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
காட்டூர் போலீசார் அமரேஷ்பிரசாத் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்த போலீசார் தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிக்கு சென்றபோது வடமாநில தொழிலார்கள் கற்களை வீசி ரகளையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நேற்று வடமாநில தொழிலாளர்கள் உயிரிழந்த அமரேஷ்பிரசாத் குடும்பத்துக்கு இழப்பீடு கேட்டு குடியிருப்பு பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்த முயன்றபோது திடீரென கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
இதில் செங்குன்றம் துணை கமிஷனர் பாலாஜி உள்பட 10-க்கும் மேற்பட்ட போலீசார் காயம் அடைந்தனர். கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை விரட்டினர். பின்னர் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்களை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில், போலீசார் மீது கற்களை வீசி வன்முறையில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளர்கள் 29 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்