கடிதம் எழுதும் திருடன் (மாதிரிப்படம்)
கடிதம் எழுதும் திருடன் (மாதிரிப்படம்)மெட்டா ஏஐ

’வீட்டுல உடம்பு சரியில்ல...’ திருடனின் லெட்டர்!

Published on

நடக்கின்ற திருட்டு சம்பவங்களைப் பார்த்தால், திருடர்கள் மீது இரக்கம் வந்துவிடும் போல. ‘இதற்காகத்தான் திருடினேன்’ என்ற காரணத்தோடு, ’திருடியதற்காக என்னை மன்னித்துவிடுங்கள்’ என அவர்கள் கடிதம் எழுதி வைத்துவிட்டுச் செல்வது தொடர் நிகழ்வாகி வருகிறது.

கடந்த பிப்ரவரி மாதம், உசிலம்பட்டியில் உள்ள திரைப்பட இயக்குநர் மணிகண்டன் வீட்டிலிருந்து ஒரு லட்சம் ரூபாய், 5 பவுன் தங்க நகை, கடைசி விவசாயி திரைப்படத்திற்காக மத்திய அரசால் வழங்கிய இரு தேசிய விருதுக்கான வெள்ளி பதக்கங்கள் திருடப்பட்டது.

பொருட்கள் திருடு போன மறுநாளே, மணிகண்டன் வீட்டில் ஒரு பாலித்தீன் பையில், வெள்ளி பதக்கங்களுடன், 'அய்யா எங்களை மன்னித்து விடுங்கள் உங்கள் உழைப்பு உங்களுக்கு..' என்ற தூண்டு சீட்டும் இருந்தது. இந்த சம்பவம் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

இப்போது, அதேமாதிரி ஒரு சம்பவம் திருச்செந்தூர் அருகே நடந்துள்ளது.

திருச்செந்துார் அருகே உள்ள மெஞ்ஞானபுரம் பகுதியை சேர்ந்தவர் ஓய்வுபெற்ற ஆசிரியர் சித்திரை செல்வின். இவர், சென்னையில் உள்ள மகனை பார்ப்பதற்காக, தன் மனைவியுடன், கடந்த 17ஆம் தேதி சென்னை சென்றுள்ளார்.

வீட்டின் சாவியை அதே பகுதியைச் சேர்ந்த செல்வி என்ற பெண்ணிடம் கொடுத்திருக்கிறார். அந்த பெண் நேற்று முன்தினம் வீட்டைப் பெருக்கி சுத்தம் செய்ய சென்றபோது, வீட்டின் கதவுகள் உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து அவர் மெஞ்ஞானபுரம் போலீசாருக்கும், சித்திரை செல்வினுக்கும் தகவல் தெரிவித்தார்.

திருடன் எழுதி வைத்துவிட்டு சென்ற கடிதம்
திருடன் எழுதி வைத்துவிட்டு சென்ற கடிதம்

மெஞ்ஞானபுரம் போலீசார் போனில் சித்திரைசெல்வினை தொடர்புகொண்டு பீரோவில் வைத்திருந்த பொருட்கள் மற்றும் பண விபரங்களை கேட்டறிந்துள்ளனர். பீரோவில் வைத்திருந்த 60,000 ரூபாய், 1.5 சவரன் கம்மல், ஒரு ஜோடி வெள்ளி கொலுசு ஆகியவை திருடப்பட்டு இருப்பது தெரிந்தது. அதைத் தொடர்ந்து வீட்டில் போலீசார் சோதனையிட்டதில், திருடன் பச்சை நிற மை பேனாவால், ஒரு கடிதம் எழுதி வைத்திருந்ததை போலீசார் கைப்பற்றினர்.

அந்த கடிதத்தில், 'என்னை மன்னித்து விடுங்கள். நான் இன்னும் ஒரு மாதத்தில் திருப்பி தந்து விடுகிறேன். என் வீட்டில் உடம்பு சரியில்லை. அதனால் தான்' என குறிப்பிட்டுள்ளார்.

திருடர்கள் கடித இலக்கியம் என தனித் தொகுப்பு வெளியிடலாம் போலிருக்கிறதே...

logo
Andhimazhai
www.andhimazhai.com