சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

யூ டியூப் சேனல்களைக் கட்டுப்படுத்துவதற்கு உகந்த நேரம் இது – உயர்நீதிமன்றம்

முன்ஜாமின் வழக்கு ஒன்றில் கருத்து கூறிய சென்னை உயர்நீதிமன்றம், யூ டியூப் சேனல்களைக் கட்டுப்படுத்துவதற்கான தகுந்த நேரமிது என கருத்து கூறியிருக்கிறது.

ரெட் பிக்ஸ் சேனலுக்குப் பேட்டியளித்த பிரபல யூட்டியூபர் சவுக்கு சங்கர் காவல் துறை உயர் அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சவுக்கு சங்கரின் நேர்காணலை ஒளிபரப்பிய ரெட் பிக்ஸ் யூட்டியூப் சேனல் தலைமை நிர்வாகி ஃபெலிக்ஸ் ஜெரால்ட் மீதும் காவல்துறை வழக்குப்பதிவு செய்யக்கூடும் என்று கூறப்படுகிறது.

இதனால், சவுக்கு சங்கர் வழக்கில் தன்னையும் காவல்துறை கைது செய்யக்கூடும் என்பதால் தனக்கு முன்ஜாமின் வழங்கவேண்டும் என்று பெலிக்ஸ் ஜெரால்ட் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குமரேஷ் பாபு, "யூட்டியூப் சேனல்களைக் கட்டுப்படுத்துவதற்குத் தகுந்த நேரம் இது. நேர்காணல் தர வருபவர்கள் அவதூறான கருத்துக்களைக் கூற, தூண்டும்விதமாக நேர்காணல் எடுப்பவர்களை முதல் எதிரியாகச் சேர்க்கவேண்டும்." என்று நீதிபதி கருத்து தெரிவித்தார்.

மேலும், பெலிக்ஸ் ஜெரால்டின் மனு மீது ஒரு வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்று காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி விசாரணையைத் தள்ளிவைத்தார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com