சங்கரய்யா இறுதி ஊர்வலம்
சங்கரய்யா இறுதி ஊர்வலம்நன்றி: தீக்கதிர்

அரசு மரியாதையுடன் சங்கரய்யா உடல் தகனம்!

சுதந்திரப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான என்.சங்கரய்யாவின் உடல் அரசு மரியாதையுடன் சென்னையில் இன்று தகனம் செய்யப்பட்டது.

ஐந்து தலைமுறைகளாக அரசியலில் செயல்பட்டுவந்த என்.சங்கரய்யா (வயது102), சில நாள்களுக்கு முன்னர் மூச்சித்திணறலால் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சையைத் தொடர்ந்து நேற்று காலை 9.30 மணி அளவில் மருத்துவமனையில் அவர் காலமானார்.

தகவல் அறிந்து அங்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சங்கரய்யாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். தமிழக அரசின் தகைசால் தமிழர் விருதை முதலில் பெற்ற சங்கரய்யாவின் உடல் முழு அரசு மரியாதையுடன் செய்யப்படும் என்றும் அறிவித்தார்.

முதலில், சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் உள்ள சங்கரய்யாவின் இல்லத்தில் புதன்கிழமை காலை அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

பின்னர் அங்கிருந்து எடுத்துச்செல்லப்பட்டு சென்னை தி.நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தில் நேற்று பிற்பகல் முதல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

தமிழக அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் என ஏராளமானவர்கள் சங்கரய்யாவுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இன்று காலையில் தி.நகரிலிருந்து வாகனப் பேரணியாக அடையாறுவரையிலும், அடையாறு தொலைபேசித் தொடர்பக முனையிலிருந்து தலைவர்கள் நடந்தபடி ஊர்வலமாகவும் பெசன்ட் நகர் மின்மயானம்வரை சங்கரய்யாவின் இறுதிப்பயணம் நடைபெற்றது.

தி.மு.க.வின் அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ். பாரதி, துணைப் பொதுச்செயலர் ஆ.ராசா, ஆதித் தமிழர் கட்சியின் தலைவர் கு.ஜக்கையன், மார்க்சிஸ்ட் கட்சியின் கே.பாலகிருஷ்ணன், ஜி.ராமகிருஷ்ணன், சு.வெங்கடேசன், உ.வாசுகி, இந்து என்.ராம் ஊர்வலமாக நடந்துசென்றனர்.

ஊர்வலம் பெசண்ட் நகர் மின்மயானத்தை அடைந்தது. பின்னர், அரசு மரியாதையுடன் காவல்துறையினர் 30 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க, மூத்த தலைவர் சங்கரய்யாவின் உடல் தகனம் செய்யப்பட்டது.

மயானத்தில் நடைபெற்ற அஞ்சலிக் கூட்டத்தில் சீமான், திருமாவளவன், வைகோ, கி.வீரமணி, பிரகாஷ் காரத், மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி உட்பட்ட தலைவர்கள் பேசினர்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com