நிறைமாதக் கர்ப்பிணி வேட்பாளர் மீது தாக்குதல்!

நிறைமாதக் கர்ப்பிணி வேட்பாளர் மீது தாக்குதல்!
Published on

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிட்ட, நிறைமாத கர்ப்பிணிப் பெண்ணான, தங்கை அனீஸ் பாத்திமா மீது நடத்தப்பட்டிருக்கும் மிகக் கொடூரமானத் தாக்குதல் தமிழகத்தையே அதிர வைத்துள்ளது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் கூறியுள்ளார்.

மாற்று அரசியல் கருத்துகளை எதிர்கொள்ளத் துணிவில்லாத திமுகவினர், ஒரு கர்ப்பிணிப் பெண் என்றும் பாராமல், மனிதாபிமானமற்ற முறையில் வன்முறையை ஏவி இருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.

”அரசியல் நாகரிகம் என்பது பெண்களை மதிப்பதிலும், அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதிலுமே அடங்கியுள்ளது. ஆனால், அதிகார மமதையில் திமுக கட்சியினர் பெண் வேட்பாளரை, அதுவும் ஒரு கருவுற்றத் தாயின் மீது தாக்குதல் நடத்தி மருத்துவமனையில் அனுமதிக்கும் நிலைக்குத் தள்ளியிருப்பது, நாகரிகச் சமூகத்தின் தலைகுனிவாகும்.

கருவில் இருக்கும் உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல், ஒரு சாதாரண அரசியல் மோதல் அல்ல. இது மிக மோசமான மனித உரிமை மீறல்.

சனநாயக ரீதியாகப் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு, குறிப்பாகப் பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டியது அரசின் கடமை. திமுகவினரின் இந்த வன்முறை வெறியாட்டத்தைக் கட்டுப்படுத்தத் தவறிய காவல்துறை மற்றும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு கவலையளிக்கிறது.

இந்த அராஜகச் செயலை வன்மையாகக் கண்டிப்பதோடு, தங்கை அனீஸ் பாத்திமா அவர்கள் மீது தாக்குதல் நடத்திய திமுகவினர் அனைவரையும் உடனடியாகக் கைது செய்து, அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றும் வேல்முருகன் கூறியுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com