ஜீவன் தொண்டமான்
ஜீவன் தொண்டமான்

கச்சத்தீவை திருப்பித் தருமாறு இந்தியா கேட்கவில்லை! – இலங்கை அமைச்சர்

கச்சத்தீவை திரும்ப ஒப்படைக்கும்படி இந்திய அரசு இலங்கையிடம் எந்தவித கோரிக்கையும் வைக்கவில்லை என்று இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான் கூறியுள்ளார்.

மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலயில், கச்சதீவு விவகாரத்தை பா.ஜ.க. தலைவர்கள் பேசுபொருளாக்கி உள்ளனர்.

கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக நேற்று விளக்கம் அளித்த வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், 1974 ஆம் ஆண்டு கடல் எல்லை வரையறை தொடர்பாக இந்தியா- இலங்கை இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானதாகவும், அப்போது, வரையறுக்கப்பட்ட எல்லையின் படி, கச்சத்தீவு, இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டதாகவும் தெரிவித்தார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட மற்றொரு ஒப்பந்தத்தில் மீன் பிடிக்கவும் தடை விதிக்கப்பட்டதாகவும் கூறினார்.

கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதால் கடந்த 20 ஆண்டுகளில் 6,180 இந்திய மீனவர்கள் இலங்கையால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு முறையும் மத்திய அரசின் நடவடிக்கையால் தான் தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில், இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான், கச்சத்தீவை திரும்ப ஒப்படைக்கும்படி இந்திய அரசு இலங்கையிடம் எந்தவித கோரிக்கையும் வைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

ஆங்கில நாளேடு ஒன்றிற்கு பேட்டியளித்த இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான், ”இந்தியா - இலங்கை இடையிலான வெளியுறவுக் கொள்கை ஆரோக்கியமாக உள்ளது. கச்சத்தீவை திரும்ப ஒப்படைக்கும்படி இந்திய அரசு இலங்கையிடம் எந்தவித அதிகாரப்பூர்வ கோரிக்கையும் வைக்கவில்லை. ஒருவேளை கச்சத்தீவு குறித்து கோரிக்கை வந்தால், அதற்கு இலங்கை வெளியுறவுத்துறை பதில் அளிக்கும்” என்றார்.

கச்சத்தீவை மீட்க மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருவதாக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்த நிலையில், அதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான் அளித்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com