ஒரே நாடு ஒரே மருத்துவம்? தமிழக அரசும் இதற்கு உடந்தையா?

அமைச்சர் மா. சுப்பிரமணியன்
அமைச்சர் மா. சுப்பிரமணியன்
Published on

ஒன்றிய அரசின் ஒருங்கிணைந்த மருத்துவமுறையை நடைமுறைப்படுத்த தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை முயல்வது கண்டனத்திற்குரியது என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி. ஆர். இரவீந்திரநாத் கூறி உள்ளார். அவரது அறிக்கை வருமாறு:

'ஒரே தேசம் - ஒரே மருத்துவமுறை ( One Nation - One Health System)'   என்பதை 2030 ஆம் ஆண்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்ற நோக்கில் ஒன்றிய அரசு செயல்படுகிறது.

அதற்காக நவீன அறிவியல் மருத்துவத்துடன், ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி, சித்தமருத்துவம்,யோகா,இயற்கை மருத்துவம் போன்ற பல்வேறு பழைய மருத்துவமுறைகளை  ஒன்றிணைக்க முயல்கிறது.

இது நவீன அறிவியல் மருத்துவத்தின் வளர்ச்சிக்கு பங்கம் ஏற்படுத்தும்.

மக்களுக்கு தரமான மருத்துவ சிகிச்சைகள் கிடைப்பதை கெடுத்துவிடும்.

மருத்துவ அறிவியல் குறித்து , ஒன்றிய அரசின் பிற்போக்கான தவறான கொள்கையும், நவீன அறிவியல் மீது அதற்குள்ள வெறுப்புமே இதற்குக் காரணமாகும்.

நவீன அறிவியல் மருத்துவத்தை , நமது பண்பாட்டிற்கு எதிரானதாக அன்னியமானதாக ஒன்றிய அரசு கருதுகிறது.

நவீன அறிவியல் மருத்துவத்தை, மேற்கத்திய மருத்துவமாகவும், கிறிஸ்தவ மருத்துவமாகவும், ஆங்கில மருத்துவமாகவும், காலனிய ஆட்சி முறையின் மருத்துவமாகவும்  ஒன்றிய ஆட்சியாளர்கள் பார்க்கின்றனர்.இதற்கு அவர்களது இந்துத்துவா சித்தாந்தமே காரணம்.

அந்த அடிப்படையில் வேதகால மருத்துவ முறைகளையும், மூடநம்பிக்கைகளையும்,போலி மருத்துவ அறிவியலையும், சோதிடத்தையும், ஆன்மீக மருத்துவத்தையும், பழமைவாதத்தையும், ஆயுஷ் மருத்துவ முறைகளையும் நவீன அறிவியல் மருத்துவத்தில் திணிக்க முயல்கின்றனர்.

ஆயுர்வேதாவிற்கு இந்துச் சாயத்தை பூசி அதை இந்துராஷ்டிராவின் மருத்துவ முறையாக மாற்ற முயல்கின்றனர். இது கண்டனத்திற் குரியது.

நவீன அறிவியல் மருத்துவம் என்பது இதுவரை  மனித குலம் படைத்துள்ள அறிவுச் செல்வத்தின் திரட்சியாகும். அதன் பரிணமிப்பு ,வளர்ச்சி ஆகியவற்றில் ஒட்டு மொத்த மனிதச் சமூகத்தின்  பங்களிப்பும் உள்ளது. இது உலகளாவிய அறிவியலாகும்.

இத்தகைய சிறப்புமிக்க நவீன அறிவியல் மருத்துவத்தை , தனது அரசியல் நோக்கங்களுக்காக ஒன்றிய அரசு பலிக்கடா ஆக்குவது வேதனைக்குரியது.

தேசிய மருத்துவ ஆணையம்,நிதி ஆயோக், தேசிய நலக் கொள்கை 2017, தேசியக் கல்விக் கொள்கை 2020 , தேசிய நலவாழ்வு குழுமம் மற்றும் ஒன்றிய மக்கள் நல்வாழ்வுத்துறை போன்றவற்றின் மூலம் ஒன்றிய  அரசு ஒருங்கிணைந்த மருத்துவ முறையை  திணிக்கிறது.

அதன் ஒரு பகுதியாக , நவீன அறிவியல் மருத்துவப் படிப்பான MBBS உடன் BAMS என்ற ஆயுர்வேதா படிப்பை இணைத்து , ஓர் ஒருங்கிணைந்த புதிய மருத்துவப் படிப்பை (Integrated Medical Course), புதுவை ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் ஒன்றிய அரசு தொடங்க முயல்கிறது.

இந்நிலையில், ஒன்றிய அரசின் அழுத்தத்தால், நவீன அறிவியல் மருத்துவத்தை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் ,அதனுடன், ஓமியோபதி,சித்தா போன்ற மருத்துவ முறைகளை ஒருங்கிணைத்து ஒருங்கிணைந்த மருத்துவ (Integrated Medicine) முறையை கொண்டுவர ,தமிழ்நாடு பொது சுகாதாரத்துறையும்  முயல்வது அதிர்ச்சி அளிக்கிறது.

இது பகுத்தறிவுக்கும், அறிவியலுக்கும் எதிரானதாகும்.

எனவே, இத்தகைய முயற்சியை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென தமிழ்நாடு அரசை,சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.

logo
Andhimazhai
www.andhimazhai.com