பட்டா
பட்டா

சிஸ்டம் சரியாயிடுச்சு போலிருக்கே… ஆச்சர்யப்பட்ட நடிகர்!

பட்டா... இந்த மூன்றெழுத்து வார்த்தை பலரை பதைக்கச் செய்துள்ளது. செய்தித்தாள்களில் அடிக்கடிப் பார்க்கலாம் பட்டா மாறுதல் செய்ய லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது என்ற செய்தியை. சொத்து வாங்கியவர்களிடம் உடனே கேட்கப்படும் கனமான செய்தி பட்டா உங்க பேருக்கு மாத்தியாச்சா? இதை மாற்றுவதற்குள் சில பல முறைகள் அலைய வேண்டி இருக்கும் என்பதுதான் நடைமுறை.

இப்போது இதில் மாற்றம் வந்திருக்கிறது. பத்திரப்பதிவுத் துறை கணினிகளில் மென்பொருள் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு, சொத்து ஒருவர் வாங்கிய உடனேயே அவர் பெயரில் பட்டா மாறிவிடுகிற மாபெரும் அதிசயம் நடைமுறைக்கு வந்துள்ளது.

இப்படி மாற்றிட வேண்டும் என்ற நடைமுறை, கடந்த எடப்பாடி கால ஆட்சியின்போதே கொண்டுவர முயற்சி எடுக்கப்பட்டது. ஆனால், அப்போது வருவாய்த்துறை சார்ந்த சில குழுக்கள் தங்கள் அதிகாரம் பறிபோவதாக எதிர்ப்புத் தெரிவித்து முடக்கியதாகவும் ஆனால் இந்த ஆட்சியில் நிலை மாறி, இந்த மாற்றங்கள் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

பட்டா மனுக்கள் இரண்டு வகை. ஒன்று நேரடியாகப் பெயர் மாற்றம் செய்யவேண்டிய உட்பிரிவு இல்லாத பட்டா. இன்னொன்று உட்பிரிவு செய்யக்கூடிய பட்டா. ஒரு சர்வே எண்ணில் குறிப்பிட்ட பகுதிகளை சர்வே செய்து பிரித்து உட்பிரிவு செய்யக்கூடியது. இதற்கு பத்திரப் பதிவுத் துறையால் வருவாய்த்துறைக்கு அனுப்பப்பட்டு இந்த மனுவை கிராம நிர்வாக அலுவலர், சர்வேயர், வருவாய் ஆய்வாளர், துணை தாசில்தார், தாசில்தார் ஆகியோர் ஆய்வு செய்து அனுமதி தந்து அதன் பின்னர் பட்டா மாற்றம் செய்யப்படும்.

பட்டா
பட்டா

தற்போதைய மாற்றம்

சொத்து பதிவு செய்தவுடன் நேரடியான பெயர் மாற்றம் செய்யும் பட்டா எனில் உடனே பெயர் மாறிவிடும் பட்டா திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. முதலில் இது காஞ்சிபுரம், மதுரை மாவட்டங்களில் தலா ஒரு தாலுகாவில் அமல் படுத்தப்பட்டு சரிபார்க்கப்பட்டது. பின்னர் கூடுதலான தாலுகாக்களிலும் அதன் பின்னர் தமிழ்நாடு முழுமைக்குமாக அமலுக்கு வந்துள்ளது. இந்த முறைப்படி சமீப காலம் வரைக்கும் பதிவு செய்த மறுநாள் வழங்கபட்ட பட்டா மாறுதல், தற்போது பத்திரப்பதிவு முடிந்த உடனே பெயர் மாறிவிடும் என்ற ‘சூப்பர் பாஸ்ட்’ நிலையை எட்டி இருப்பதாக இது பற்றி விவரமறிந்தவர்கள் சந்தோஷம் தெரிவிக்கின்றனர். விரைவில் இத்திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும்.

உட்பிரிவு செய்யவேண்டிய பட்டா மனுக்களுக்கு வழக்கமான நடைமுறைதான் என்றாலும்கூட 30 நாட்களுக்குள் இதன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டிய காலம் நிர்ணயம் செய்யப்ப்பட்டதுடன் முதலில் வருபவர்க்கு முன்னுரிமை என்ற முறையும் கடைபிடிக்கப்படுவதாகத் தெரிவிக்கின்றனர்.

சமீபத்தில் நாவலூர் பகுதியில் உச்ச நடிகர் ஒருவர் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து வாங்கினார். அது ஒரு கிரானைட்ஸ் ஆலை அமைந்துள்ள இடம். பொதுவாக இந்த கட்டடங்கள் நிறைந்த சொத்துவாங்கப்படும்போது அதன் மதிப்பை சரிபார்க்க பத்திரப்பதிவு முடிந்தவுடன் அத்துறையுடன் இணைக்கப்பட்டிருக்கும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்யப்படும். 50 லட்சத்தைத் தாண்டி இருந்தால் இந்த ஆய்வு கட்டாயம். இந்த ஆய்வு முடிந்து மூலப்பத்திரம் கைக்குக் கிடைக்கவே ஒரு மாதம் ஆகும். அப்புறம் பட்டா மாற்றத்துக்கு இன்னும் தாமதம் ஆகும்.

இந்நிலையில் தற்போதைய புதிய வழிமுறையால் நடிகரின் சொத்து பதிவு செய்யப்பட்ட மறுநாளே அவர் பெயரில் பட்டா மாற்றம் செய்யப்பட்டுவிட்டது.

எந்த முயற்சியும் செய்யாமலே தானாக பட்டா மாற்றம் செய்யப்பட்டதைப் பார்த்து உச்ச நடிகர் மூக்கில் விரலை வைத்து ஆச்சர்யப்பட்டதாகக் கேள்வி.

எல்லாப்புகழும் திராவிட மாடலுக்கே.

logo
Andhimazhai
www.andhimazhai.com