பொசுக்... 3 சிலிண்டர்கள்தான் - முதல்வர் விஜய் அறிவிப்பு!

CM Vijay at assembly
சட்டப்பேரவையில் முதல்வர் விஜய்
Published on: 

த.வெ.க. அரசின் தேர்தல் வாக்குறுதியில், 6 இலவச சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று முதல்வர் விஜய் சட்டப்பேரவையில் இன்று அறிவித்தார்.

இரண்டு நாள்கள் விடுமுறைக்குப் பிறகு இன்று கூடிய சட்டப்பேரவையில் விதி எண் 110-இன் கீழ் அவர் சில அறிவிப்புகளை வெளியிட்டார்.

எரிவாயு குறித்த அவரின் அறிவிப்பு விவரம் :

"கடந்த நான்கு மாதங்களாக வளைகுடாப் பகுதியில் நிலவிவரும் போர்ச்சூழல் காரணமாக எரிவாயு சிலிண்டர் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவி வருகின்றது.

இதனால் மாற்று எரிபொருளைப் பயன்படுத்தி வருவதாலும், எரிவாயு சிலிண்டர் விலை உயர்வினாலும் பொதுமக்கள் தங்களது வருவாயிலிருந்து கூடுதலான தொகையினைச் செலவிட்டு இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.

இதனைக் கருத்திற்கொண்டு நிதிநெருக்கடியான சூழலிலும் பொதுமக்களின் நிதிச்சுமையினைக் குறைக்கும் வகையில், எரிவாயு சிலிண்டருக்காகச் செலவழிக்கப்பட்டு வரும் தொகையினை அவர்களுக்கு வழங்க இவ்வரசு முடிவு செய்துள்ளது.

முதற்கட்டமாக “அன்னபூரணி சூப்பர் சிக்ஸ்” திட்டத்தில் ஆண்டிற்கு மூன்று விலையில்லா எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும்.

எரிவாயு சிலிண்டருக்கான விலை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.

ஆண்டு வருமானம் ரூ. 2.5 இலட்சத்திற்கு மிகாமல் உள்ள, பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள குடும்பத்தினர், சிறு, குறு விவசாய குடும்பத்தினர், மாற்றுத்திறனாளி குடும்பத்தினர் போன்ற சமூகத்தில் உள்ள நலிந்த குடும்பத்தினர் பயனடைவார்கள். இத்திட்டத்தினைச் செயல்படுத்துவதற்கான ஆயத்தப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

இத்திட்டம், வரும் பொங்கல் பண்டிகை ஜனவரி மாதம்
முதல் செயலாக்கத்திற்குக் கொண்டுவரப்படும்." என்று முதல்வர் விஜய் கூறினார். 

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com