ஒரே காரில் ஓ. பன்னீர்செல்வம் – செங்கோட்டையன் இருவரும் பயணித்தது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒரே வார்த்தையில் பதில் அளித்துள்ளார்.
முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜையை ஒட்டி பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். அவருடன் திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி. உதயகுமார், செல்லூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:
தனக்கு சொந்தமான நிலத்தை ஏழை, பட்டியலின மக்களுக்கு வழங்கியவர் தேவர். நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினராகவும் மக்களுக்குத் தொண்டாற்றியவர். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது தேவருக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டது. பசும்பொன் தேவர் திருமகனாருக்கு சட்டசபையில் திருவுருவப் படத்தை திறந்தது அதிமுக. முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா வழங்க மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் இருவரும் ஒரே காரில் பயணித்தது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, "தெரியவில்லை. வந்தால் தான் தெரியும். வந்தால் நான் பதில் சொல்கிறேன்" என்று கூறினார்.
முன்னதாக மதுரையிலிருந்து பசும்பொன்னுக்கு ஓ.பன்னீர்செல்வத்துடன் ஒரே காரில் செங்கோட்டையன் பயணம் செய்துள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.