
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக ஓபிஎஸ் 3 முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்துள்ளார். 2017ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த போது துணை முதல்வராகவும் இருந்தார்.
2022ஆம் ஆண்டு அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ்,தமது ஆதரவாளர்களுடன் தனி அணியாக செயல்பட்டு வந்தார். அதன் பின்னர் அதிமுகவில் மீண்டும் இணைவதற்கு பல்வேறு முயற்சிகளை அவர் மேற்கொண்ட போதும் எடப்பாடி பழனிசாமி மறுத்துவிட்டார்.
தற்போது சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், எந்த அணியில் ஓபிஎஸ் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனிடையே ஓபிஎஸ் அணியில் இருந்த மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஆகியோர் ஏற்கனவே தங்களது எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் இணைந்து விட்டனர்.
இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு இன்று காலை வந்த ஓபிஎஸ்ஸை அமைச்சர்கள் எ.வ.வேலு, சேகர்பாபு, தேனி எம்.பி. தங்கதமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் வரவேற்று அழைத்துச் சென்றனர்.
இதனையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஓபிஎஸ், அவரது ஆதரவு எம்.எல்.ஏ. ஐயப்பன், ஓபிஎஸ் மகனும் முன்னாள் எம்.பி.யுமான ரவீந்திரநாத் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் திமுகவில் இணைந்தனர்.
ஓபிஎஸ், அவரது மகன் ரவீந்தரநாத், எம்.எல்.ஏ. ஐயப்பன் உள்ளிட்டோருக்கு திமுகவின் கறுப்பு சிவப்பு துண்டை முதல்வர் ஸ்டாலின் அணிவித்தார். இதன் பின்னர் திமுகவின் உறுப்பினர் படிவத்தில் ஓபிஎஸ்ஸும் அவரது ஆதரவாளர்களும் கையெழுத்திட்டனர்.