தண்ணீர் பாட்டில் வீச்சு ... அவையில் கலகலப்பூட்டிய ஓ.பன்னீர்!

ஓ. பன்னீர்செல்வம்
ஓ. பன்னீர்செல்வம்
Published on

சட்டப்பேரவையில் இன்று முற்பகலில் ஆளுநர் உரையின் மீதான விவாதத்தின்போது தே.மு.தி.க. உறுப்பினர் பிரேமலதா பேசினார். அப்போது ஆளுநர் சரியாக தமிழை உச்சரிக்கவில்லை என்று காட்டமாகக் குறிப்பிட்டார்.

மேலும், அவையில் பணியாளர்கள் அவ்வப்போது தண்ணீரை டம்ளரில் எடுத்துவந்து கொடுக்கிறார்கள். இதில் அவர்களுக்கும் சிரமம், நமக்கும் சிரமம் என்கிறபடி குறிப்பிட்டு, இதை மாற்றி தண்ணீர் குடுவையை உறுப்பினர்களின் இடத்தில் வைத்துவிட்டால் இந்த சிரமம் இருக்காது என்றும் கூறினார்.

முதலமைச்சர் தன்னுடைய பிறந்த நாளில் இதற்குத் தீர்வுகாண வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். குடுவை (பிளாஸ்டிக்) நெகிழியாகத்தான் இருக்கவேண்டியதில்லை, கண்ணாடிக் குடுவையைக்கூட வைக்கலாம் என்றும் அவர் கூறினார்.

அவர் பேசி முடித்ததும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எழுந்து, ”அண்ணியார் இங்கு தண்ணீர் பாட்டிலைப் பற்றிப் பேசினார். பாட்டிலைக் கொண்டுவந்தால் வீசிவிடுவார்கள்.” எனக் கூறிவிட்டு உட்கார்ந்தார்.

மிகவும் இறுக்கமாகப் போய்க்கொண்டிருந்த அவையில், இதனால் சற்று இளக்கம் ஏற்பட்டு, கலகலப்பாக மாறியது.

உடனே, அவருடைய கட்சியைச் சேர்ந்த தங்கம் தென்னரசு எழுந்து, அண்ணனுக்கு அனுபவத்தைச் சொல்கிறார்போல என்று சேம்சைடு கோல் போட்டதைப் போலக் கூறியதும் அவையில் மேலும் சிரிப்பலைகள் எழுந்தன.

logo
Andhimazhai
www.andhimazhai.com