சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி, உதயகுமார்
சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி, உதயகுமார்

நேற்று சொன்னார் ஸ்டாலின்... இன்று ஓ.பன்னீர் இருக்கை மாற்றம்!

சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் இருக்கை, முதலமைச்சர் பேசிய ஒரே நாளில் அதிரடியாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பன்னீர்செல்வத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் இருக்கைக்கு அருகில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. அவர் அ.தி.மு.க.வில் இருந்தவரை எதிர்க்கட்சித் துணைத்தலைவராக அந்த இடத்தில் இருந்துவந்தார்.

பின்னர் உட்கட்சிப் பிரச்னையால் அவரை அந்தப் பதவியிலிருந்து நீக்கி, முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரைத் தேர்ந்தெடுத்ததாகவும் அவருக்கு அந்த இடத்தை வழங்குமாறும் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், பேரவைத்தலைவர் அப்பாவு அதை ஏற்காமல் இருந்துவந்தார். 

அ.தி.மு.க. திடீரென பா.ஜ.க. கூட்டணியிலிருந்து விலகிய சூழலில், அண்மைக் காலமாக ஓ.பன்னீர்செல்வம் அணியினர் பா.ஜ.க.வுடன் கூட்டு வைக்கும் திசையில் சென்றுவரும் நிலையில், சட்டப்பேரவையில் நேற்று மீண்டும் அ.தி.மு.க. தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அவையில் திடீரென இந்த இருக்கை விவகாரம் தொடர்பாகப் பேசி, பேரவைத் தலைவர் இதுகுறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதையடுத்து இன்று காலையில் அவை கூடியபோது, ஓ. பன்னீர்செல்வத்துக்கு முதல் வரிசையிலிருந்து இரண்டாம் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. எடப்பாடி பழனிசாமியின் அருகில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் உதயகுமாருக்கு இடம் ஒதுக்கப்பட்டது. முதல் நாளாக அவரும் தன் இருக்கையில் உட்கார்ந்திருக்கிறார்.    

logo
Andhimazhai
www.andhimazhai.com