ஆர்.பி.உதயகுமார்
ஆர்.பி.உதயகுமார்

அ.தி.மு.க.வை குழி தோண்டி புதைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டார் ஓ.பி.எஸ். ! – ஆர்.பி. உதயகுமார்

அ.தி.மு.க.வை குழி தோண்டி புதைக்கும் நடவடிக்கையில் ஓ.பன்னீர்செல்வம் ஈடுபட்டார் என்று ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.

மதுரையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:

அ.தி.மு.க. பிரிவதற்கு பிள்ளையார் சுழி போட்டவர் ஓ.பன்னீர்செல்வம். தனக்குப் பதவி இல்லை என்பதால் அ.தி.மு.க.வை பிரிக்க திட்டமிட்டார். கட்சியின் முக்கியத்துவம், நலன் கருதி ஓ.பி.எஸ். மீண்டும் அ.தி.மு.க.வில் இணைக்கப்பட்டார். அ.தி.மு.க.வின் முக்கிய முடிவுகளில் மறுப்பு தெரிவிப்பார் அல்லது மௌனம் காப்பார்.

ஓ.பி.எஸ்.-ன் நடவடிக்கைகளால் அ.தி.மு.க. வளர்ச்சி அடையாமல் பின்னோக்கி சென்றது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ரவீந்திரநாத் தேனியில் வெற்றி பெற்றது அ.தி.மு.க.வின் வெற்றி ஓ.பி.எஸ்.-ன் வெற்றி அல்ல. இரட்டை இலைக்கு எதிராக போட்டியிட்ட ஓ.பி.எஸ்சை எந்த வகையில் ஏற்க முடியும்?. அ.தி.மு.க.வை குழி தோண்டி புதைக்கும் நடவடிக்கையில் ஓ.பி.எஸ். ஈடுபட்டார்.

நாடாளுமன்ற தேர்தலுக்குப் பின்பு ஓ.பி.எஸ்-ஐ அ.தி.மு.க.வில் சேர்க்க திட்டம் என ஊடகங்கள் எந்த ஒரு ஆதாரம் இன்றி செய்தி வெளியிடுகிறது. அ.தி.மு.க.வில் மீண்டும் ஓ.பன்னீர்செல்வம் இணைய உள்ளதாக வெளிவரும் தகவலில் உண்மையில்லை.

தொண்டர்களின் எண்ணத்தின் அடிப்படையில் அ.தி.மு.கவை எடப்பாடி பழனிச்சாமி வழிநடத்தி செல்கிறார். எந்த காலத்திலும் ஓ.பன்னீர்செல்வத்தை அ.தி.மு.க.வில் இணைக்கப் போவதில்லை என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் ஒப்புதலோடு சொல்கிறேன். ஓ.பன்னீர்செல்வம் என்னும் தனிமனிதனின் சுயலாபத்திற்காக இவ்வளவு வழக்குகள் அதிமுக மீது போடப்பட்டது.

பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை அரைவேக்காடு என்பது தமிழ்நாட்டுக்கே தெரியும். அண்ணாமலை பேச்செல்லாம் பொய்யானது. அண்ணாமலை கர்நாடகாவில் என்ன பேசினார் என தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியும். தனது கட்சியோடு கூட்டணி வைத்தால் தமிழ்நாட்டையே பட்டா போட்டு தருவதாக கூறினார்கள். இவ்வாறு ஆர். பி. உதயகுமார் கூறினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com