ஓவியக் கலைஞர் கூத்துப்பட்டறை நடேஷ் முத்துசாமி காலமானார்!

koothupattarai natesh
கூத்துப்பட்டறை ஓவியக் கலைஞர் நடேஷ் முத்துசாமி
Published on

பாரம்பரிய ஓவியரும் கூத்துப்பட்டறை நாடகக் குழுவின் பன்முகக் கலைஞருமான மு. நடேஷ் சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 64. 

சில ஆண்டுகளாக உடல்நலக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்த அவர், தொடர் சிகிச்சையில் இருந்துவந்தார். இந்நிலையில் நேற்று இரவு 10 மணியளவில் அவர் இயற்கை எய்தினார். 

பத்மஸ்ரீ விருது பெற்ற காலஞ்சென்ற கூத்துப்பட்டறை முத்துசாமி அவர்களின் மகனான இவர், சென்னை, நுண்கலைக் கல்லூரியில் படித்தவர். தென்னி்ந்திய அளவில் பிரபலமாக விளங்கிய கலைஞர் ஆர்.பி. பாஸ்கரனின் மாணவர் இவர்.

மூன்று வயதிலேயே வீட்டுச் சுவரில் சாக்பீசால் வரையத் தொடங்கிய நடேஷ், அறிவியலில் குறிப்பாக வான் இயற்பியலில் ஆர்வம் கொண்டிருந்தார். பதினாறாவது வயதில் தானே ஒரு தொலைநோக்கியை உருவாக்கினார். 

பாஸ்கரனிடமிருந்து பென்சிலை எப்படி சுதந்திரமாக விட்டு வரைவது எனப் பிடித்துக்கொண்ட இவர், நான்கு ஓவியங்கள் வரையவேண்டிய ஒரு நாளில், முப்பத்து நான்கு ஓவியங்களை வரைந்து அசரவைத்தார். 

சென்னை கவின்கலைக் கல்லூரியில் ஐரோப்பிய ஓவியங்களின் தாக்கத்தைப் பெற்ற இளைஞராக இருந்த நடேஷ், மாறாக இந்திய கோயில் ஓவியங்கள் குறிப்பாக சோழர், பல்லவர் கால ஓவியங்களை வரைவதில் ஈடுபட்டார். 

நடேசின் ஓவியங்கள் பார்வையாளர்களுக்கு வினோதமானவையாக இருக்கும் என்று ஒருபுறமும் மைக்கேல் ஆஞ்சலோ, டாவின்சி போன்றோரின் ஓவியங்களின் வகைமைகளோடு ஒப்பிட்டும் பேசப்பட்டவர். 

1986இல் கல்லூரியை முடித்ததும், கூத்துப்பட்டறையில் இணைந்தவர், அரங்க வடிவமைப்பு, ஓளி வடிவமைப்பு, ஓவியம், ஒப்பனை, நாடக எழுத்து என பன்முகக் கலைஞராக உருவெடுத்தார். ஆனாலும் பாரம்பரிய ஓவியங்களிலிருந்து அவர் விலகவே இல்லை.

கூத்துப்பட்டறையின் நாடகங்களுக்கு மட்டுமின்றி, தமிழ் நவீன நாடகக் குழுக்களின் நாடகங்களுக்கும், நவீன நடன நாடகங்களுக்கும் அரங்க வடிவமைப்பு, ஒளி வடிவமைப்பை மேற்கொண்டவர்.

எளிய பொருட்களைக் கொண்டு பிரமாண்டமான மேடையமைப்பு, ஒப்பனைகளைப் படைத்துக்காட்ட முடியும் என்றும் நிரூபித்தவர்.

சிதார் இசை மேதை பண்டிட் இரவிசங்கர், பரதநாட்டியக் கலைஞர் தனஞ்செயன் நடத்திய இந்திய அளவில் நிகழ்த்தப்பட்ட நவீன இசை நாடக நிகழ்வுக்கு அரங்க வடிவமைப்பு செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

1999இல் இன்ஸ்டாலேஷன் ஆர்ட் எனப்படும் நிர்மாணக் கலையில் நடேஷ் தீவிரமாக இறங்கினார்.

பிஃபோர் பிக்கமிங் பிளைண்டு BEFORE BECOMING BLIND எனும் தலைப்பில் நடேசின் கோட்டோவியப் புத்தகம் ஒன்று வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

அன்னாரின் இறுதிநிகழ்வுகள், சென்னை, வளசரவாக்கம் இடுகாட்டில் இன்று மாலை 4.30 மணியளவில் நடைபெறும் என கூத்துப்பட்டறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கூத்துப்பட்டறை,

58/16, மூன்றாவது மெயின் ரோடு,

ஸ்ரீ ஐயப்பா நகர்,

விருகம்பாக்கம்,

சென்னை - 600 092.

தொடர்புக்கு : 9003290306

logo
Andhimazhai
www.andhimazhai.com