பா.ஜ.க. அரசின் நயவஞ்சகத் திட்டம் படுதோல்வி- நெடுமாறன் விமர்சனம்

Nedumaran
பழ. நெடுமாறன்
Published on

பா.ஜ.க. அரசின் சூழ்ச்சித் திட்டம் படுதோல்வி அடைந்துவிட்டது என்று தமிழர் தேசிய முன்னணியின் நிறுவனர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.

தொகுதி மறுவரையறை மசோதா குறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கை:

” மக்களவை, பேரவைகளில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு அளிக்கவேண்டும் என்ற பெயரில் நாடாளுமன்றத்தின் எண்ணிக்கையை 850ஆக உயர்த்த மோடி அரசு திட்டமிட்டது. இதன்மூலம் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை உண்மையாக நிறைவேற்றிய தென்மாநிலங்கள் வஞ்சிக்கப்படும் அபாயமும், வடமாநிலங்கள் குறிப்பாக, இந்திப் பேசும் மாநிலங்களில் மக்கள்தொகைப் பெருக்கத்தின் விளைவாக அம்மாநிலங்களில் வெற்றிபெற்றாலே இந்தியாவை ஆள்வதற்கான பெரும்பான்மை கிடைத்துவிடும் என வகுக்கப்பட்ட மோடி அரசின் திட்டத்தை எதிர்க்கட்சிகள் அனைத்தும் விழிப்புடன் இருந்து தோற்கடித்துள்ளன. இதற்கு வழிகாட்டிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களை மனமாரப் பாராட்டுகிறேன்.

இந்தி பேசும் மக்களின் ஆட்சியின் கீழ் மற்ற மொழிகளைப் பேசும் மக்களை கொண்டுவரும் திட்டத்திற்கு மகளிர் இடஒதுக்கீடு சட்டம் என்ற பெயரை நயவஞ்சமாகச் சூட்டும் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. மகளிருக்கு 33% இடஒதுக்கீடு அளிக்கவேண்டும் என்பது பா.ச.க. அரசின் உண்மையான நோக்கமாக இருப்பின், இப்போது நாடாளுமன்றத்தில் உள்ள 543 இடங்களிலும் அனைத்து சட்டமன்றங்களிலும் 33% இடங்களை மகளிருக்கு அளிக்கும் வகையான சட்டத்தைக் கொண்டுவருவதற்கு பா.ச.க. அரசு தயாரா என நான் அறைகூவல் விடுக்க விரும்புகிறேன்.” என்று நெடுமாறன் கூறியுள்ளார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com