அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக ஒருபோதும் ஏற்க முடியாது என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
டிடிவி தினகரன் தலைமையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டத்திற்குட்பட்ட மாவட்டக் கழக செயலாளர்கள் தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தலைமைக் கழக அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
இதன்பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய டிடிவி தினகரன், "அரசியலில் இருப்பதால் அரசியல் மட்டும்தான் பேச வேண்டும் என்று அவசியமில்லை. நண்பர்கள் என்ற முறையில் அண்ணாமலையுடன் ஒரு மணி நேரம் பேசினேன்.
அண்ணாமலை மாநிலத் தலைவராக இருந்தபோதுதான் எங்களை கூட்டணிக்கு கொண்டு வந்தார். தில்லியில் நாங்கள் யாரையும் சந்திக்கவில்லை. அண்ணாமலை மூலமாகத்தான் கூட்டணியில் இணைந்தோம். கூட்டணி விட்டு விலகிய பிறகும் அவரிடம் பேசிக் கொண்டிருக்கிறேன்.
கூட்டணி விவகாரத்தில் நீங்கள் அவசரப்பட வேண்டாம் என்று அவர் தொடர்ந்து கூறி வந்தார். முடிவை பரிசீலனை செய்யக் கோரினார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி தொடரும்பட்சத்தில், நான் அந்த கூட்டணியில் தொடர்வதற்கு வாய்ப்பு இல்லை என எழுதியே கொடுத்துவிட்டேன். அதை மறுபரிசீலனை செய்யவும் முடியாது என்பதுதான் உண்மை." என்று கூறியுள்ளார்.