‘பொய் மட்டுமே பேசும் பொய்பாடி பழனிசாமி…’ – அமைச்சர் ரகுபதி விமர்சனம்!

அமைச்சர் ரகுபதி - எடப்பாடி பழனிசாமி
அமைச்சர் ரகுபதி - எடப்பாடி பழனிசாமி
Published on

"கரூர் துயரச் சம்பவத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பொய் மட்டுமே பேசி வருகிறார். சட்டமன்றத்தில் முழுக்க முழுக்க பொய்யாகவே பேசி இருக்கிறார் பொய்பாடி பழனிசாமி.” என அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார். பதில் கொடுத்துள்ளார்.

தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில் இன்றைய கூட்டத்தில் கரூர் கூட்ட நெரிசல் பலி சம்பவம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார். இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு கேள்விகளை எழுப்பினார். அதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்தடுத்து பதில் கொடுத்தார். சட்டசபையில் இருவருக்கும் இடையில் காரசார விவாதம் நடைபெற்றது.

எடப்பாடி பழனிசாமி பேசும்போது, "தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை தவிர்த்திருக்கலாம். கரூருக்கு முன்னதாக 4 மாவட்டங்களில் விஜய் பிரசாரம் செய்திருந்தார். அப்போது கூடிய கூட்டத்தை வைத்து கரூரில் எவ்வளவு பேர் கூடுவார்கள் என்று காவல்துறையும் உளவுத்துறையும் அரசுக்கு எண்ணிக்கை அளித்திருக்கும். அதற்கேற்ப பாதுகாப்பு வழங்கியிருந்தால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டிருக்கும்.

வேலுச்சாமிபுரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்று அதிமுக கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தவெகவுக்கு அந்த பகுதியில் அனுமதி அளித்தது ஏன்? இது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.” என்று பேசினார் எடப்பாடி பழனிசாமி. இதையடுத்து, அதிமுகவினர் தர்ணாவில் ஈடுபட்டு, வெளிநடப்பு செய்தனர்.

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் ரகுபதி, "கரூர் துயரச் சம்பவத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பொய் மட்டுமே பேசி வருகிறார். இன்றைக்கு சட்டமன்றத்தில் முழுக்க முழுக்க பொய்யாகவே பேசி இருக்கிறார் பொய்பாடி பழனிசாமி. எதிலாவது குற்றம் கண்டுபிடிக்க முடியுமா என்று பார்த்து, அதில் அரசியல் செய்யலாம் கூட்டணி சேர்க்கலாம் என்று எடப்பாடி பழனிசாமி கனவு காண்கிறார்.

தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தில் திருச்சியில், திருவாரூரில், நாகையில், நாமக்கல்லில் யாருக்கும் எதுவும் நடக்கவில்லை என்கிறார் எடப்பாடி பழனிசாமி. திருச்சியில் மக்கள் மயக்கமடைந்தார்கள், ஆதாரங்கள் இருக்கின்றன. நாமக்கல்லில் அன்றைக்கு 35 பேர் பாதிக்கப்பட்டனர். தவெக பிரச்சாரம் நடந்த இடங்களில் எல்லாம் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த பாதிப்பு எப்படி நடந்தது என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். எந்த அரசியல் கட்சி தலைவரும் கூட்டத்துக்கோ, ரோடு ஷோவுக்கோ போனால் 500 மீட்டர் தொலைவுக்கு முன்பே வேனில் எழுந்து நின்று கையசைத்து மக்களின் வரவேற்பை ஏற்றுக்கொள்வார்கள். ஆனால், விஜய் வரும்போது உள்ளேயே உட்கார்ந்து கொண்டார். அதன்பிறகு லைட்டையும் அணைத்து விட்டார்கள். சினிமா போல லைட்டை போட்டு அணைத்து காட்டினார்கள்.

அதனால் மக்கள் கூட்டம் விஜய்யை பார்க்க முடியாமல் முண்டியடித்து வந்தார்கள். அதில் மூச்சுத்திணறித்தான் இறந்துள்ளனர். வேண்டுமென்றே செய்த செயலால் பலர் இறந்துள்ளனர். இரவில் துரிதமாக அரசு எடுத்த நடவடிக்கையால்தான் பல பொதுமக்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டது. எத்தனை கூட்டணிகள் சேர்ந்து வந்தாலும், திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைய முதலமைச்சரின் சாதனை துணையாக இருக்கும்." எனத் தெரிவித்துள்ளார் அமைச்சர் ரகுபதி.

logo
Andhimazhai
www.andhimazhai.com