தமிழக அரசின் மீது ஏமாற்றம் - பண்ருட்டி வேல்முருகன் அதிருப்தி!

panrutti velmurugan
பண்ருட்டி வேல்முருகன்
Published on

சாம்சங் நிறுவன தொழிலாளர்களின் நியாயமான உரிமைகளுக்குத் துணை நிற்காமல், அவர்களின் போராட்டத்தை காவல்துறை மூலமாக ஒடுக்கி, ஆலை நிர்வாகத்திற்குத் துணைபோகும் தமிழ்நாடு அரசின் நடவடிக்கை ஏமாற்றம் அளிக்கிறது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் அதிருப்தி தெரிவித்துள்ளார்.  

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தில் இயங்கிவரும் பன்னாட்டு நிறுவனமான சாம்சங் தனியார் தொழிற்சாலையில், 1,500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இத்தொழிலாளர்கள், 8 மணி நேர வேலை, ஊதிய உயர்வு, தொழிற்சங்க அங்கீகாரம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை கேட்டு, கடந்த செப்டம்பர் 9 முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொழிலாளர்களின் நியாயமான உரிமைகளை ஏற்க மறுக்கும் ஆலை நிர்வாகம், அவர்களின் போராட்டத்தை காவல்துறை மூலமாக ஒடுக்குவதற்கு முயற்சித்து வருவது கண்டனத்துக்குரியது.” என்றும் கூறியுள்ளார். 

”சாம்சங் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி, தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளைப் பெற்றுத் தர வேண்டிய தமிழ்நாடு அரசு, அதனைச் செய்ய தவறியதுடன், புறவழியான சதி திட்டத்தின் மூலம் நிர்வாகத்திற்கு ஆதரவான ஒரு குழுவோடு பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடு ஏற்பட்டதாகக் கூறுவது, தமிழ்நாட்டு மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவது கண்டனத்துக்குரியது.

அதாவது, திட்டமிடப்பட்ட அமைச்சர்களும், சாம்சங் நிறுவனமும் ஏற்படுத்தி வைத்திருக்க கூடிய ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் என்ற ஆவணத்தை சாம்சங் தொழிற்சாலையில் இருந்து முன்கூட்டியே அழைத்து வரப்பட்ட ஒரு சில தொழிலாளர்களை கையில் வைத்துக்கொண்டு சாம்சங் நிறுவனமும், அமைச்சர்களும் ஒரு உடன்பாடு ஏற்பட்டதாக அறிக்கை வெளியிடுவது கண்டனத்துக்குரியது; உரிமைக்காக போராடும் தொழிலாளர்களை ஏமாற்றும் சூழ்ச்சியாகும்.” என்றும் வேல்முருகன் சாடியுள்ளார். 

அதுமட்டுமின்றி, சாம்சங் நிர்வாக அதிகாரிகள் வீடுவீடாகச் சென்று தொழிலாளர் குடும்பங்களின் பெண்களிடம், உங்கள் கணவரை சங்கத்தில் இருந்து விலகச் சொல்லுங்கள்,  இல்லையேல்  பணிநீக்கம் செய்து விடுவோம் என மிரட்டி இருப்பதும், இதற்கு காவல்துறை துணை போவதும் ஜனநாயகத்தின் விரோதப் போக்கு என அவர் கண்டித்துள்ளார். 

குறிப்பாக, உரிமைக்காகப் போராடும் தொழிலாளர்களின் பக்கம் நிற்காமல், சாம்சங் நிறுவனத்திற்கு ஆதரவாக தமிழ்நாடு அரசு நிற்பது என்பது  ஏற்புடைய செயல் அல்ல எனக் குறிப்பிட்டுள்ள வேல்முருகன், 

”சாம்சங் தொழிலாளர் சங்கத்திற்கு பதிவுச் சான்றிதழ் வழங்க வேண்டுமென்ற போராட்டம் சம்பந்தப்பட்ட தொழிலாளர்களின் போராட்டம்  மட்டுமல்ல; அரசியல் சட்டத்தை பாதுகாக்கக் கூடிய போராட்டமாகும். அரசியல் அமைப்புச்சட்டம் பிரிவு 19(1)(சி), தொழிற்சங்கம் அமைப்பதற்கான உரிமையை அடிப்படை உரிமை என உறுதி செய்துள்ளது.

எனவே, சாம்சங் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகள் கோரும் அறப்போராட்டத்தை அடக்கி ஒடுக்குவதைக் கைவிட்டு, சாம்சங் தொழிலாளர் சங்கத்திற்கு பதிவுச் சான்றிதழ் வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அச்சங்கத்தோடு சாம்சங் நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி தொழிலாளர்கள் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண வேண்டும்.
கைது செய்யப்பட்ட தொழிலாளர்கள் அனைவரையும் எவ்வித வழக்கும் பதியாமல் உடனடியாக விடுவிக்க தமிழ்நாடு அரசு முன் வர வேண்டும்.” என்றும் வலியுறுத்தியுள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com