பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை
பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை

தி.மு.க. – பா.ஜ.க. இடையேதான் போட்டி : அண்ணாமலை சொல்கிறார்!

2024 நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. – பா.ஜ.க. இடையேதான் போட்டி என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

சென்னையில் பா.ஜ.க. மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பிறகு அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது:

”தேர்தலை கட்சி எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை பத்திரிகையாளர்களிடம் சொல்ல முடியாது. அது கட்சியில் உள்ளரங்கில் விவாதிக்கப்பட வேண்டியது. பா.ஜ.க வளர்ச்சியடைய வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்பதற்கான தேர்தலாக 2024 தேர்தல் இருக்கும்.

2024 தேர்தலில் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை பா.ஜ.க. கூட்டணி உருவாக்கும். 39 தொகுதிகளிலும் பா.ஜ.க. கூட்டணி வெல்லும். தேர்தல் முடிவுகள் பா.ஜ.க. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவாக இருக்கும். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சிலர் சேரலாம். அ.தி.மு.க. இல்லையென்று வருத்தப்படவும் இல்லை. சந்தோஷப்படவும் இல்லை.

2024 நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க.விற்கும் பா.ஜ.க.விற்கும் தான் சவால் . மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் உள்ள பா.ஜ.க., தி.மு.க.விற்கு இடையே தான் போட்டி. கூட்டணியில் புதிய கட்சிகள் சேர்வது குறித்து பா.ஜ.க. தலைமை முடிவு செய்யும்.

2024 தேர்தலில் மோடியை பிரதமர் வேட்பாளராக ஏற்கும் கட்சியுடன் தான் கூட்டணி. தி.மு.க. பா.ஜ.க.வைத்தவிர வேறு எந்த கட்சியும் ஆட்சியில் இல்லை.

கடந்த இரண்டு வருடங்களாக சொல்லி வருகிறேன், கட்சி பலமடைந்திருக்கிறது என்று. அதை 2024 தேர்தல் உறுதி செய்யும்” என்று அண்ணாமலை கூறினார்.

அ.தி.மு.க. தொடர்பாகவும் அதன் கூட்டணி தொடர்பாகவும் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் பெரும்பாலும் நேரடியாக பதில் அளிக்கவில்லை.

பேட்டியைத் தொடர்ந்து, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில் அண்ணாமலை ஆஜரானார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com