பசும்பொன்னில் முதலமைச்சர் ஸ்டாலின்
பசும்பொன்னில் முதலமைச்சர் ஸ்டாலின்

பசும்பொன்னில் சூடான அரசியல்- ஆளுநர் மீது ஸ்டாலின் கடும் தாக்கு, எடப்பாடி வண்டி மீது காலணி வீச்சு!

இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் உ.முத்துராமலிங்கம் நினைவு நாள் நிகழ்வுகள் நடைபெற்றன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, நா.த.க. தலைவர் சீமான் உட்பட பல கட்சிகளின் தலைவர்களும் மரியாதை செலுத்தினர்.

அங்கு செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “ஆளுநர் மாளிகையில் வெடிகுண்டு வீசப்படவில்லை. வெளியில் தெருவில்தான் வீசப்பட்டுள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகளை பத்திரிகை நிருபர்களுக்கு காவல்துறை அதிகாரிகள் காட்டியிருக்கிறார்கள். ஆகவே, ஆளுநர் மாளிகையிலிருந்து திட்டமிட்டு பொய் பரப்பப்படுகிறதே தவிர, வேறு ஒன்றும் இல்லை. ஆளுநர் பா.ஜ.க.வாக மாறியிருக்கிறார். ஆளுநர் மாளிகையும் பா.ஜ.க. அலுவலகமாக மாறியிருக்கிறது, வெட்கக்கேடு.” என கடுமையாகக் குறிப்பிட்டார்.

மேலும், “ தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் தொடர்கதையாக நடந்துவருகிறது. இதுகுறித்து அவ்வப்போது ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதுகிறோம். வெளியுறவு அமைச்சரோடு தொடர்புகொள்கிறோம். பிரதமருக்கும் கடிதம் அனுப்புகிறோம். சில முறை மீனவர்களை விடுவிக்கிறோம். அண்மையில்கூட, இராமநாதபுரம் மீனவர்கள் கைதான தகவல் கேட்டு அதிர்ச்சியானேன். வெளியுறவு அமைச்சருக்கு கடிதம் எழுதியிருக்கிறேன். அவரோடு தொடர்புகொண்டு நாடாளுமன்ற தி.மு.க. தலைவர் டி.ஆர்.பாலுவை, இராமநாதபுரம் மீனவர்களையும் அழைத்துப்போய் பேசச் சொல்லி இருக்கிறோம்.

இன்னாருக்கு இதுதான்னு சொல்றது ஆரியம், எல்லாருக்கும் எதுவும் உண்டுனு சொல்வது திராவிடம். இந்த வித்தியாசத்தை ஆளுநர் புரிந்துகொள்ள வேண்டும்.” என்றும் முதலமைச்சர் கூறினார்.

பசும்பொன்னில் எடப்பாடி பழனிசாமி
பசும்பொன்னில் எடப்பாடி பழனிசாமி

பின்னர், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பசும்பொன்னில் மரியாதை செலுத்தினார். அப்போது, அவருடைய வாகனத்தின் மீது இளைஞர் ஒருவர் காலணியை வீசினார். உடனே அவரை காவல்துறையினர் மடக்கிப் பிடித்து கூட்டிச்சென்றனர். எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஒரு கூட்டத்தினர் கண்டன முழக்கமும் எழுப்பினார்கள். அதைக் கேட்டு சிரித்தபடியே அவர் சென்றார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com