கேமரா முன்னாடியா இதைச் செய்வாங்க? - பிரதமரை விளாசிய ப.சி.!
“பிரதமர் மோடி கேமரா முன்னாடி ஏன் தியானம் செய்கிறார்” என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரதமர் மோடி கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் இரண்டாவது நாளாக தியானம் செய்துவருகிறார். இது தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், ப.சிதம்பரம் இது தொடர்பாகக் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் அளித்த ஒரு பேட்டியில்,
“தியானம் செய்வது பற்றி எங்களுக்கு எந்த விமர்சனமும் கிடையாது. மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம். கேமரா முன்னாடி ஏன் அதைச் செய்கிறார் என்பது எங்களின் கேள்வி.
பிரதமர் மோடிக்கு தமிழ் மீதோ தமிழ்நாட்டின் மீதோ பாசம் இல்லை. அப்படி பாசம் இருந்திருந்தால் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியைக் கண்டித்திருக்க வேண்டும்.
திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்து, திருநீறு பூசி அவரை ஒரு சைவ இந்துவாக மாற்றிய ஆளுநரை மத்திய அரசு கண்டித்திருக்க வேண்டும் இல்லையா?
இடத்துக்கு ஏற்ற மாதிரி பிரதமர் மோடி பேசிக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு மாநிலத்துக்குச் செல்லும்போதும் அந்த மாநிலத்தை முதல் மாநிலமாக மாற்றுவேன் என்கிறார். அது எப்படி முடியும்? பின்தங்கிய மாநிலங்களுக்கு கூடுதல் உதவி செய்வோம், எல்லோரும் முன்னேறப் பாடுபடுவோம் என்று பேசுவதுதானே சரியாக இருக்கும்.
பிரதமர் மோடி ஏப்ரல் 20ஆம் தேதி வரை பேசிய பேச்சுக்கும், அதன் பின்னர் பேசிய பேச்சுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. அந்தப் பேச்சை மோடி பின்னர் கேட்க வேண்டும். அவர் தொடர்ந்து அபத்தமாக பேசிக்கொண்டிருந்தார்.” என்று ப. சிதம்பரம் கூறினார்.