
“பழைய ஓய்வூதியத்தினை முழுமையாகப் பெறுவதற்கும் ஏனைய 9 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான இயக்க நடவடிக்கைகள் தொடரும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர்கள்- ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது.
இது தொடர்பாக ஜாக்டோ ஜியோ இன்று ஜனவரி 5ஆம் தேதி வெளியிட்ட அறிக்கை:
தமிழக முதலமைச்சர், தமிழ்நாட்டிலுள்ள ஒட்டுமொத்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள்-அரசு பணியாளர்கள் மனம் மகிழும் வகையில் தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட (TAPS) ஓய்வூதியத் திட்டத்தினை அறிவித்தார்கள். இந்த அறிவிப்பிற்கு ஜாக்டோ ஜியோ மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது.
அறிவிப்பு வெளிவந்த உடனேயே, ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் முதலமைச்சரை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தனர். முதலமைச்சரும் ஜாக்டோ ஜியோவுக்கு மனமார்ந்த பாராட்டுதல்களைத் தெரிவித்தார்.
இந்த நல்லெண்ண நடவடிக்கை அடிப்படையில் ஜாக்டோ ஜியோ 6.1.2026 முதல் மேற்கொள்ளவிருந்த காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
ஜாக்டோ ஜியோவினைப் பொறுத்தவரையில், ஓய்வூதியத்தினை மீட்டெடுக்கும் இயக்க நடவடிக்கைகளை இத்தோடு நிறுத்தி வைக்கிறோம் என்ற பேச்சுக்கே இடமில்லை.
தொடர்ந்து முதலமைச்சர் அவர்களுக்கு உரிய முறையில் கொண்டு சென்று,
• அறிவிக்கப்பட்டுள்ள உறுதிப்படுத்தப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தினை 1.1.2026 முதல் நடைமுறைப்படுத்த அரசாணையினை வெளியிடுவதற்கும்:
• 10 சதவிகித மாதாந்திர பங்களிப்பினை முற்றிலுமாக கைவிடுவதற்கும்
• பணி ஓய்வு பெறும் வரை பணியாளர்கள் சார்பாக பிடித்தம் செய்த பங்களிப்புத் தொகையினை பணி ஓய்வின் போது வட்டியுடன் திரும்ப வழங்குவதற்கும்.
• முழு ஓய்வூதியம் வழங்குவதற்கான காலத்தினை 25 ஆண்டுகளாக நிர்ணயம் செய்வதற்கும்
• ஏனைய 9 அம்சக் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றுவதற்கான இயக்க நடவடிக்கைகளை ஜாக்டோ ஜியோ மேற்கொள்ளும்.
ஓய்வூதியத்திற்கான இந்த வெற்றி என்பது 2017 முதல் கடந்த ஒன்பது ஆண்டுகளாக நாம் அனைவரும் நமது ஒற்றுமை என்ற பதாகையினை உயர்த்திப் பிடித்து, நமக்குள் கருத்து மோதல்கள் பல இருந்தாலும், அதை எல்லாம் புறந்தள்ளிவிட்டு, களத்தில் முன்களப் போராளிகளால் நின்று சாத்தியமாக்கி உள்ளோம் என்பதை மிகுந்த மகிழ்ச்சியோடும் மன நிறைவோடும் ஜாக்டோ ஜியோ பதிவு செய்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.