அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

தமிழ்நாட்டு மக்கள் செருப்பால் அடிப்பார்கள்! – அமைச்சர் உதயநிதி ஆவேசம்!

ஆளுநர் ரவி தன்னுடைய சித்தாந்தத்தை தமிழ்நாட்டு மக்களிடம் சொன்னால் செருப்பைக் கழட்டி அடிப்பார்கள் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

நீட் தேர்வை ரத்து செய்ய மறுக்கும் மத்திய அரசையும், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியையும் கண்டித்து திமுகவின் பல்வேறு அணிகள் சார்பில், இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

மதுரையில் அதிமுக மாநாடு நடைபெறுவதால் அங்கு நடைபெற இருந்த உண்ணாவிரதப் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி ”தமிழ்நாட்டில் நீட் தேர்வால் 21 உயிர்களை இழந்துள்ளோம். 21 பேரும் தற்கொலை செய்யவில்லை; கொலை செய்யப்பட்டுள்ளார்கள். இதை செய்தது மத்திய பாஜக அரசு. இதற்கு துணை நின்றது அடிமை அதிமுக அரசு.” என்று ஆவேசமாக பேசத்தொடங்கிய உதயநிதி.

”இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் அமைச்சராகவோ, சட்டமன்ற உறுப்பினராகவோ நான் கலந்து கொள்ளவில்லை. சாதாரண உதயநிதி ஸ்டாலினாகத்தான் பங்கேற்றுள்ளேன்.

அமைச்சர்கள் போராட்டத்தில் ஈடுபடக் கூடாது என்று சொன்னார்கள். அதிமுகவை சேர்ந்த ஒருவர் என் மீது புகாரே கொடுத்துள்ளார். போராட்டத்தில் ஈடுபட்டால் பதவி இழக்க நேரிடும் என்றால், இந்த அமைச்சர் பதவி இருந்தால் இருக்கட்டும் இல்லையென்றால் போகட்டும். எங்களுக்கு மாணவர்களின் கல்வி உரிமை முக்கியம். அதற்காக எந்த இழப்பையும் எதிர்கொள்ள தயார்.

ஆளுநருக்கு எவ்வளவு திமிர், கொழுப்பு. அவர் நடத்திய நீட் கூட்டத்தில் ஒரு மாணவரின் பெற்றோர், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தார். ஆனால், ஆளுநரோ, எதற்காகவும் எப்போதும் நீட் தேர்வை ரத்து செய்யமாட்டேன் என்கிறார்.

ஆளுநரை பார்த்து கேட்கிறேன், நீங்கள் யார்? நீங்கள் ஒரு தபால்காரர். அவர் ஆர்.என் ரவி இல்லை; ஆர்.எஸ்.எஸ். ரவி. ஆளுநர் பதவி விலக வேண்டும். ஆளுநர் தன்னுடைய கொள்கையை தமிழக மக்களிடம் சொல்லட்டும், செருப்பால் அடிப்பார்கள்.” என்றார்.

”தமிழ்நாடு ஆளுநரிடம் நேருக்கு நேர் கேள்வி கேட்ட அம்மாசியப்பன் மீது நடவடிக்கை எடுக்க பாஜகவினர் புகார் அளித்துள்ளனர். அம்மாசியப்பன் வேலைக்கு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் நாங்கள் சும்மா விட மாட்டோம். நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பதற்கான முழு நடவடிக்கைகளையும் முதலமைச்சர் மேற்கொண்டு வருகிறார். நீட் விலக்கு மசோதாவுக்கு ஆதரவு அளிக்காத ஒரே கட்சி பாஜகதான். மசோதாவை குடியரசுத் தலைவருக்கு மட்டும் அனுப்புவதுதான் ஆளுநரின் பணி. தகுதியற்ற நீட் தேர்வை என்றைக்கு ஒழிக்கிறோமோ அன்றைக்குத்தான் தமிழ்நாடு மாணவர்களுக்கு விடியல் கிடைக்கும்.

நீட் விலக்குக்கான இன்றைய போராட்டம் ஆரம்பம் மட்டுமே, இது முடிவல்ல. நீட் எதிர்ப்பு போராட்டத்தை அனைத்துக் கல்லூரி மாணவர்களும் முன்னெடுக்க வேண்டும். ஜல்லிக்கட்டுக்காக நடந்த போராட்டம் போல் மாணவர்களின் உயிரைப் பறிக்கும் நீட்டுக்கு எதிராகவும் போராட்டம் நடத்துவோம். ” என்றும் அவர் தெரிவித்தார்.

“நீட் தேர்வை ரத்து செய்யும் போராட்டத்தில் அ.தி.மு.க.-வும் இணைய வேண்டும். அ.தி.மு.க. இளைஞரணி செயலாளரை அனுப்புங்கள். பிரதமர் இல்லத்தின் முன் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி போராடுவோம். அதில் வெற்றி கிடைத்தால் அதன் பெருமையை நீங்களே எடுத்துக் கொள்ளலாம்.” என்றார்.

தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள மாவட்ட்ட தலைநகரங்களில் மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.

logo
Andhimazhai
www.andhimazhai.com