கோவையில் நேற்று மாலை நடைபெற்ற உணவுத் திருவிழாவை சரியாக ஏற்பாடு செய்யாமல் ஏமாற்றிவிட்டதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை மக்கள் சரமாரியாக விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர். இது தொடர்பான வீடியோகள் இணையத்தில் வைரலாகி வருகின்ற.
கோவையின் பெருமைகளை எடுத்துரைக்கும் வகையில் கோவை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவின் போது பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். அந்த வகையில் கோயம்புத்தூர் விழாவின் 17ஆம் ஆண்டு கொண்டாட்டம் கடந்த நவம்பர் 23ஆம் தேதி தொடங்கியது.
கோயம்புத்தூர் விழாவின் ஒரு பகுதியாக கொடிசியா மைதானத்தில் தமிழ்நாடு கேட்டரர்ஸ் சங்கம் சார்பில் இரண்டு நாட்கள் நடைபெறும் கொங்கு திருமண உணவு திருவிழா மற்றும் கண்காட்சி நேற்று மாலை தொடங்கியது. இந்த உணவு திருவிழாவில், தமிழகம் முழுவதும் 1000 க்கும் மேற்பட்ட கேட்டரிங் நிறுவனங்கள் பங்கேற்றன.
இதில் 100க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்டு 400க்கும் மேற்பட்ட சைவ, அசைவ உணவுகள், இனிப்புகள், குளிர்பானங்கள், பழச்சாறுகள் என ஏராளமான உணவுகள் பரிமாறப்பட்டன. 10 விதமான பிரியாணிகள், 150 முக்கிய உணவு வகைகள் உட்பட 400க்கும் மேற்பட்ட உணவுப் பொருட்கள்,100 விதமான இனிப்பு வகைகள் இதில் இடம்பெற்றன. அதுமட்டுமின்றி பல்வேறு உணவு நிறுவனங்கள் தங்களது தயாரிப்பு பொருட்களையும் காட்சிப்படுத்தி இருந்தனர்.
இந்த உணவுத் திருவிழாவுக்கான நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.799+ ஜிஎஸ்டி, 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ரூ.499+ ஜிஎஸ்டி உடன் நிர்ணயம் செய்யப்பட்டது. 5 வயது மற்றும் அதற்குக் குறைவான குழந்தைகளுக்கு நுழைவு கட்டணம் இலவசம்.
முதல் நாளான நேற்று ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பத்துடன் வருகை தந்தனர். மக்கள் கூட்டம் அதிகம் இருந்ததால் அதிகமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அங்கு நிர்வகிக்க முடிவதை விட 5 மடங்கு அதிகமான மக்கள் குவிந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக உணவு அரங்குகளில் ஆயிரக்கணக்கான மக்கள், தட்டுகளோடு நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
சரிவர நிகழ்ச்சி ஏற்பாடு செய்யாமல், அதிக அளவிலான டிக்கெட்டுகளை விற்றதே, இந்தக் குழப்பங்களுக்கு காரணம் என உணவுத் திருவிழாவுக்குச் சென்ற பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
சமூக ஊடகங்களில் பலர் கொங்கு உணவுத் திருவிழா குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.