‘முதல்வரின் திமிர் பேச்சிற்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்’ – எடப்பாடி பழனிசாமி

Edappadi K. Palaniswami
எடப்பாடி பழனிசாமி
Published on

“முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமிர் பேச்சிற்கு மக்கள் தக்க பாடத்தை புகட்டுவார்கள்.” என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கொளத்தூரில் மழை வெள்ள பாதிப்புகளை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார் . இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “எதிர்க்கட்சித் தலைவருக்கு குற்றச்சாட்டு வைப்பது வேலையாகப் போய்விட்டது. அதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. எதிர்க்கட்சித் தலைவருக்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றார்.

இதற்கு கண்டனம் தெரிவித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கொலை, கொள்ளை போன்ற சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளால் மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. போதைப்பொருள் புழக்கம் தலைவிரித்து ஆடுகிறது. இதுமட்டுமன்றி ஆசிரியர்கள், மருத்துவர்கள், நெசவாளர்கள், போக்குவரத்து ஊழியர்கள், தொழில்துறையினர் என அனைத்து தரப்பினரும் தெருவில் இறங்கி போராடும் சூழலே உள்ளது.

குற்றச்சாட்டு வைப்பதே எனக்கு வேலையாக போய்விட்டது" என்று கூறும் மு.க.ஸ்டாலின் அவர்களே- விடியா திமுக ஆட்சியின் அவல நிலையை சுட்டிக்காட்ட வேண்டியது எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் என்னுடைய கடமை. அதற்கு முறையான நடவடிக்கை எடுத்து செயல்படுத்துவது அரசின் கடமை. அதை செய்யாத, தனக்கு எந்த திறமையும் இல்லாத ஒரு முதல் அமைச்சரிடம் இப்படிப்பட்ட மடைமாற்றும் பதிலைத்தான் எதிர்பார்க்க முடியும்.

திமுகவிடம் நாகரிகத்தையோ, மக்கள் மீதான அக்கறையோ எதிர்பார்க்க முடியாதுதான் என்றாலும், ஸ்டாலினின் சமீபத்திய தரக்குறைவான பேச்சுகளே அதற்கான மிகப்பெரிய சான்றாக அமைகிறது .நிர்வாகத் திறனற்ற முதலமைச்சர் முடிந்தால் மக்கள் பணி செய்யுங்கள்; இல்லையேல், நிர்வாகத் திறனில்லை என்று ஒப்புக்கொள்ளுங்கள். ஆட்சி இருக்கிறது என்ற ஆணவச் செருக்கில் நீங்கள் பேசும் திமிர் பேச்சிற்கு மக்கள் தக்க பாடத்தை நிச்சயம் புகட்டுவார்கள்.” என பதிவிட்டுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com