சேலம் பெரியார் பல்கலைக்கழகம்
சேலம் பெரியார் பல்கலைக்கழகம்

பெரியார் பல்கலை. பதிவாளர் அனுப்பிய சுற்றறிக்கை: மீண்டும் வெடித்த சர்ச்சை!

சேலம் பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர்கள், நிர்வாகப் பணியாளர்கள் புத்தகம் வெளியிடுவதற்கும், சமூக ஊடகங்களில் பேட்டி அளிப்பதற்கும் முன்அனுமதி பெற வேண்டும் என அப்பல்கலைக்கழகத்தின் பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பியிருப்பது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் பெரியார் பல்கலைக்கழம் அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக ஜெகநாதன் பதவியேற்றதிலிருந்தே பல பிரச்னைகள் எழுந்துவருகின்றன. அவரும் இன்னும் சிலரும் சேர்ந்து ஊழல் முறைகேடு செய்தது தொடர்பாக ஊழல்தடுப்புக் காவல்துறை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுவருகிறது.

வன்கொடுமை சட்டத்தில் கைதாகி, ஜாமினில் உள்ள ஜெகநாதன் பல்கலைக்கழகப் பணிகளில் ஈடுபட்டுவருகிறார். அவர் மீதான விசாரணை நடந்துகொண்டிருக்கும்போதே ஆளுநர் ஆர்.என்.இரவி பல்கலைக்கழகத்துக்குச் சென்று அவரைச் சந்தித்து ஆலோசனை நடத்தியது, புதிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், பெரியார் பல்கலைகழத்தின் பதிவாளராக இருக்கக்கூடிய தங்கவேலு இன்று சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், பல்கலைக்கழக ஆசிரியர்கள், நிர்வாக பணியாளர்கள் நூல் வெளியிடுவதற்கு முன் அனுமதி பெற வேண்டும் எனவும், சமூக ஊடகங்களில் பேட்டி அளிப்பதுக்கு முறையான முன் அனுமதி பெற வேண்டும் எனவும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

இந்த சுற்றறிக்கைக்கு பல்கலைக்கழக ஆசிரியர்களும், நிர்வாகப் பணியாளர்களும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

கடந்த டிசம்பர் மாதம், பெரியார் பல்கலைக்கழக இணைப் பேராசிரியர் இரா.சுப்பிரமணி ‘பெரியாரின் போர்க்களங்கள்’ என்ற புத்தகத்தை எழுதியதற்கும், ‘மெக்காலே பழமைவாதக் கல்வியின் பகைவன்’ என்ற என்ற புத்தகத்தை மறுபதிப்பு செய்ததற்கும் அவருக்கு பல்கலைக்கழக நிர்வாகம் மெமோ வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com