சேலம் பெரியார் பல்கலைக்கழகம்
சேலம் பெரியார் பல்கலைக்கழகம்

பெரியார் பல்கலை பதிவாளர் பணியிடை நீக்கம்! - தமிழக அரசு அதிரடி

சேலம் பெரியார் பல்கலைக்கழக முறைகேட்டில் ஈடுபட்ட பதிவாளர் தங்கவேல் மீதான குற்றசாட்டுகள் நிரூபணமான நிலையில் அவரை பணியிடை நீக்கம் செய்ய துணைவேந்தருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சேலம் பெரியார் பல்கலை பதிவாளர் தங்கவேல் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. புகார்களின் அடிப்படையில் உயர் கல்வித்துறை கூடுதல் செயலாளர் பழனிசாமி, இணை செயலாளர் ஹென்றி தாஸ் இளங்கோ ஆகியோர் அடங்கிய இருவர் குழு விசாரணைக்காக கடந்த 2022 டிசம்பர் மாதத்தில் அமைக்கப்பட்டது.

இந்தக் குழுவினர் ஓராண்டாக விசாரணை மேற்கொண்டனர். ஐந்து முறை நேரடியாக புகார்தாரர்களை அழைத்து ஆதாரங்களை சேகரித்தனர். முழு விசாரணைக்கு பின்னர் பழனிசாமி குழு அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்தது

இந்த அறிக்கையின் அடிப்படையில் பதிவாளர் தங்கவேல் மீதான குற்றசாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளது.

முதுகலை கணித பாடத்தில் பட்டம் பெற்ற தங்கவேல், கணினி அறிவியல் துறையில் பேராசிரியராக நியமனம் செய்யப்பட்டார்.

பதிவாளர் பொறுப்பிற்கு நியமனம் செய்யப்பட்ட பின்னர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.

பட்டியலின இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சிக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் ரூ.2 கோடி அளவில் முறைகேடு, கணினி மையம் கணினி அறிவியல் துறைக்கு உபகரணங்கள் கொள்முதல் செய்வதில் முறைகேடு என பதிவாளர் தங்கவேலு செய்த பல்வேறு முறைகேடுகள் உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில், பதிவாளர் தங்கவேல் இன்னும் சில நாள்களில் பணி ஓய்வு பெற உள்ள நிலையில் அதனை நிறுத்தி வைத்து பணியிடை நீக்கம் செய்யுமாறு தமிழக அரசின் உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் கார்த்திக் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com