
சேலத்தில் விஜய் பிரசாரத்துக்கு டிசம்பர் 4 ஆம் தேதி அனுமதி கோரப்பட்டிருந்த நிலையில், தற்போது காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டிருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 3ஆம் தேதி கார்த்திகை தீபம் பண்டிகைக் கொண்டாடப்படுவதால், அன்றைய தினம் திருவண்ணாமலை உள்ளிட்ட கோயில்களில் பாதுகாப்புப் பணிகள் இருப்பதால், டிசம்பர் 4ஆம் தேதி தவெக பிரசாரக் கூட்டத்துக்கு பாதுகாப்பு கொடுக்க இயலாது என காவல்துறை தரப்பில் தவெகவுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், டிசம்பர் 4ஆம் தேதி சேலத்தில் பிரசாரம் மேற்கொள்வார் என்று அறிவிக்கப்பட்டு, அதற்காக, இன்று காலை சேலம் காவல் ஆணையரக அலுவலகத்தில் மனு செய்திருந்த நிலையில் காவல்துறை உடனடியாக மனு மீது நடவடிக்கை எடுத்து அனுமதி மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
திரைப்பட நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியைத் துவங்கி முதன் முறையாக எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலை சந்திக்கவிருக்கும் நிலையில், அவரது பிரசாரப் பயணத்துக்கு மிகப்பெரிய சவாலாக மாறியது கரூர் பிரசாரம்.
கட்சி தொடங்கியது முதலே மாநாடுகள் மூலமாக மட்டுமே மக்களை சந்தித்த விஜய் கடந்த செப்டம்பர் முதல் திருச்சியில் இருந்து பிரசாரப் பொதுக்கூட்டங்கள் நடத்தி வந்தார்.
செப். 27ஆம் தேதி கரூரில் விஜய் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான நிலையில், அவர் தனது பிரசார சுற்றுப்பயணம் தற்காலிகமாக நிறுத்தினார்.
இந்த நிலையில் சேலத்தில் இருந்து அவருடைய பிரசாரப் பயணம் மீண்டும் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், டிசம்பர் 4ஆம் தேதி பிரசாரக் கூட்டம் நடத்த அனுமதி வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. டிசம்பர் 4-ம் தேதி கார்த்திகை தீபம் என்பதால் திருவண்ணாமலையில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு சேலம் மாநகர போலீசார் பாதுகாப்பு பணிக்கு செல்வார்கள், அதனைத் தொடர்ந்து டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு தினம் என்பதால் அதற்கான முன்னெச்சரிக்கை பாதுகாப்பு பணியிலும் காவல்துறையினர் ஈடுபடுவார்கள்.
இதன் காரணமாக தவெக சார்பில் அனுமதி கோரப்பட்டுள்ள தேதியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதி கொடுக்க முடியாது என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து தவெக தரப்பில் மற்றொரு தேதி கோரப்படும் என தெரிகிறது.