பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட டிச.23 முதல் அனுமதி!

பொருநை அருங்காட்சியகம்
பொருநை அருங்காட்சியகம்
Published on

பொருநை அருங்காட்சியகத்தை நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்த நிலையில், அதை டிசம்பர் 23 முதல் பொதுமக்கள் பார்வையிடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையை அடுத்த ரெட்டியார்பட்டி மலைப் பகுதியில் 13 ஏக்கர் பரப்பில் 54,296 சதுர அடியில் ரூ.67.25 கோடியில் பொருநை அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நேற்று இரவு மின்னொளியில் மிளிர்ந்த பொருநை அருங்காட்சியகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து அருங்காட்சியகத்தின் வாயிலில் வன்னி மரத்தை நடவு செய்தாா்.

அதன்பிறகு அருங்காட்சியகத்தின் அறிமுக கூடத்தை முதலமைச்சர் திறந்து வைத்து பாா்வையிட்டார். அப்போது அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பொருள்கள் குறித்து முதல்வருக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கினார். பின்னர் கட்டடத்தின் மேல் மாடிக்கு சென்று அவர் பாா்வையிட்டார்.

இது தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் இரா சுகுமாா் கூறுகையில் ‘பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிடுவதற்கு செவ்வாய்க்கிழமை (டிச.23) முதல் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள். இதையொட்டி, பொதுமக்கள் சென்று வர வசதியாக அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் பேருந்துகள் இயக்கப்படும்’ என்றார்.

இந்த நிலையில், பொருநை அருங்காட்சியகத்தை செவ்வாய்கிழமை முதல் பொதுமக்கள் பாா்வையிடலாம்.

logo
Andhimazhai
www.andhimazhai.com