சென்னை பல்கலை பட்டம் அளிப்பு
சென்னை பல்கலை பட்டம் அளிப்பு

சென்னை பல்கலை.- ஜனாதிபதி முர்முவிடம் பட்டம் பெற முடியாதவர்கள் ஏமாற்றம்

சென்னை பல்கலைக்கழகத்தின் 165ஆவது பட்டமளிப்பு விழா, கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று காலை நடைபெற்றது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதக்கம் பெற்ற சிறந்த மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். மொத்தம் 762 பேருக்கு இவ்விழாவில் பட்டம் வழங்கப்பட்டது.

சிறப்புரை ஆற்றிய குடியரசுத் தலைவர் முர்மு, நாட்டின் ஆறு குடியரசுத் தலைவர்கள் இந்தப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றதை நினைவூட்டினார்.

முன்னாள் குடியரசுத் தலைவர்கள் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன், வெங்கட்ராமன், அப்துல் கலாம், விஞ்ஞானிகள் சி.வி.ராமன், சந்திரசேகர் ஆகியோர் இந்தப் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள்; பாலின சமத்துவத்துக்கு எடுத்துக்காட்டாக இந்தப் பல்கலைக்கழகம் திகழ்கிறது; கலை, இலக்கியம், பண்பாடு நிறைந்த மாநிலம் தமிழ்நாடு என்றும் முர்மு தன் உரையில் குறிப்பிட்டார்.

மாணவர்களின் கனவுகள் பெரிதாக இருக்கவேண்டும்; இலக்கை நோக்கி முன்னேற கடுமையாக உழைக்க வேண்டும் என்று ஆளுநர் இரவி கேட்டுக்கொண்டார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், தமிழ்நாடு அரசு உயர்கல்வியில் செய்துவரும் சாதனைகள் என பலவற்றையும் பட்டியலிட்டார்.

ஒரு காலத்தில் சென்னைப் பல்கலைக்கழகம் மட்டும்தான் என இருந்தபோது, நீதிக்கட்சி ஆட்சியில் சிதம்பரத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது என்றும் திராவிட மாடல் ஆட்சியில் உயர்கல்வியை ஊக்குவித்து வருவதாகவும் அதை ஆராய்ச்சிக் கல்வியாக உயர்த்தி வருவதாகவும் முதலமைச்சர் பெருமிதத்தோடு கூறினார்.

உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடியும் நிகழ்வில் கலந்துகொண்டார்.

பதக்கம் பெற்ற பலருக்கும் குடியரசுத்தலைவர் பதக்கம் வழங்கியபோது, பதக்கம் பெறாத முனைவர் பட்டம் முடித்தவர்களை தனியாக ஓர் அறையில் அமரவைத்தனர். அவர்களில் பலரும் தாங்களும் குடியரசுத்தலைவர் கையால் பட்டம் பெறலாம் என நினைத்திருந்ததாகவும் குடும்பத்தினருடன் வந்த தங்களை தனியாக அடைத்ததாகவும் அதிகாரிகளிடம் அதிருப்தி தெரிவித்தனர்.

காவல்துறையினர் உடனே அங்கு சென்று அவர்களை சமாதானப்படுத்தினர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com