அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என்றே பிரதமர் நரேந்திர மோடி விரும்புகிறார் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது: “ஜெயலலிதாவுடன் 25 ஆண்டுகள் உடனிருந்து பணியாற்றி இருக்கிறேன். அவர், என்ன பேச சொல்கிறாரோ, அதை மட்டும்தான் பேசி வந்திருக்கிறேன். இது அனைவருக்கும் நன்றாக தெரியும். அண்ணன் வைகோ மீது மிகுந்த மரியாதை, அன்பு, பாசம், பற்றை இன்றைக்கும் வைத்திருக்கிறேன். எனவே அவர் என்ன பேசினாலும், அவர் மீது மரியாதையோடுதான் இருப்பேன். நான் அவருக்கு பதிலை சொன்னால் அவருடைய மனத்தை புண்படுத்தக்கூடும் என்பதால், அரசியல் நாகரீகம் கருதி நான் அந்த பிரச்சினைக்கு உள்ளே செல்ல விரும்பவில்லை.
2011இல் நடந்த அந்த பேச்சை 14 ஆண்டுகள் கழித்து இப்போது பேசவேண்டிய நிலை அண்ணன் வைகோவுக்கு ஏன் வந்தது என்று தெரியவில்லை. இந்த விவகாரம் குறித்து நான் பதில் சொல்ல வேண்டும் என்று அவர் விரும்பினால் அந்த பதிலை சொல்வேன்.
செங்கோட்டையன் மற்றும் என்னை போன்ற நிர்வாகிகள் அதிமுக என்ற மாபெரும் இயக்கம் ஒன்றுபட்டு இருக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் செயல்பட்டு கொண்டிருக்கிறோம்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீது பாசமும், நம்பிக்கையும் கொண்டது பாஜக. அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என்றே பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக மேல்மட்ட தலைவர்கள் விரும்புகின்றனர். உறுதியாக நாங்கள் அதில் வெற்றி பெறுவோம். கூட்டணியிலிருந்து வெளியேறிய பிறகு பாஜக தலைவர்கள் என்னுடன் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
அதிமுகவில் எந்த விதியையும் மாற்றலாம். ஆனால், பொதுச் செயலர் தேர்வு விதியை மட்டும் மாற்றவே முடியாது என்ற வகையிலேயே எம்ஜிஆா் அதை உருவாக்கினார். பொதுச் செயலரைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை தொண்டர்களுக்குக் கொடுக்கும் விதி அது. ஆனால், இப்போது தொண்டா்களின் உரிமை பறிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து 6 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இறுதியாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், சென்னை குடிமையியல் நீதிமன்றம் இதை விசாரித்து, அதில் கொடுக்கும் தீர்ப்பே இறுதியானது என தெளிவான வழிகாட்டுதலை கொடுத்துள்ளது. அதன்படி நாங்கள் வழக்கை நடத்திவருகிறோம்.” என்றார்.