
முதலமைச்சர் விஜய்யை பா.ம.க. தலைவர் அன்புமணி இன்று காலையில் தலைமைச்செயலகத்தில் சந்தித்துப் பேசினார்.
அப்போது, சாதிவாரி சர்வேயை அரசு மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை மனு அளித்தார்.
சுமார் 25 நிமிடங்கள் இச்சந்திப்பு நீடித்தது.
அப்போது அவர் முதலமைச்சரிடம் கூறிய மூன்று விசயங்கள்:
” * தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீட்டை எதிர்த்து சிலர் 2012-&ஆம் ஆண்டில் மீண்டும் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு கடந்த மே 27&ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, வழக்கைத் தொடர்ந்த சில மாணவர்கள் படிப்பை முடித்து விட்டதைக் காரணம் காட்டி இணை வழக்குகளை உச்சநீதிமன்றம் முடித்து வைத்தாலும் கூட, இரு முதன்மை வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன.
அந்த வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் எப்போது வேண்டுமானாலும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் படலாம். அப்போது, தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, இட ஒதுக்கீடுப் பிரிவினரின் மக்கள்தொகை 69%க்கும் கூடுதலாக இருப்பதை நிரூபிக்காவிட்டால், 69% இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் ஆபத்து உள்ளது. எனவே, 69% இட ஒதுக்கீட்டை பாதுகாப்பதற்காக தமிழகத்தில் சமூகநீதி சர்வே எனப்படும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
* இரண்டாவதாக தமிழ்நாட்டில் சுமார் 100 ஆண்டுகளாக இட ஒதுக்கீடு நடைமுறையில் இருக்கும் போதிலும், அனைத்துத் தரப்பு மக்களுக்கும் அதன் பயன்கள் சென்றடையவில்லை. எடுத்துக்காட்டாக, தமிழ்நாட்டில் 69% இட இதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 26.50%, பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்களுக்கு 3.50%, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 20%, பட்டியல் இனத்தவருக்கு 15%, பட்டியலின அருந்ததியருக்கு 3%, பழங்குடியினருக்கு 1% வழங்கப்பட்டு வருகிறது. பிற்படுத்தப்பட்ட வகுப்பில் 141 சமூகங்களும், பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர் பிரிவில் 7 சமூகங்களும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் பிரிவில் 115 சமூகங்களும், அருந்ததியர்களையும் உள்ளடக்கிய பட்டியலினத்தில் 76 சமூகங்களும், பழங்குடியினத்தில் 36 சமூகங்களும் உள்ளன. இட ஒதுக்கீட்டை அனுபவிக்கும் எந்த சமூகத்திற்கும் அதன் பயன்கள் முழுமையாக கிடைக்கவில்லை. அதற்கு காரணம், சமமற்றவர்கள் சமமானவர்களாக ஒரே பிரிவில் சேர்க்கப்பட்டிருப்பது தான். இவர்களில் எந்தெந்த பிரிவினருக்கு இட ஒதுக்கீட்டின் பயன்கள் முழுமையாக கிடைக்கவில்லை என்பதைக் கண்டறிந்து, அவர்களின் முன்னேற்றத்திற்கான சமூகநீதி நடவடிக்கைகளை மேற்கொண்டால் தான் அவர்களை முன்னேற்ற முடியும். அதற்கான அத்தியாவசியத் தேவை தான் சமூகநீதி எனும் சாதிவாரி கணக்கெடுப்பு.
* மூன்றாவதாக சமூகநீதியைக் கடந்து, தமிழ்நாட்டு மக்களின் கல்வி நிலை, பொருளாதார நிலை, வேலைவாய்ப்பு, வசிப்பிடம், வாழ்க்கைத் தரம் போன்ற அடிப்படையான தரவுகளை குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை தொகுக்க வேண்டியது மாநில அரசின் கடமை ஆகும். தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தையும், சமூக நிலையையும் மேம்படுத்துவதற்கான திட்டங்களை இந்தத் தரவுகளின் அடிப்படையில் தான் மேற்கொள்ள முடியும். இந்த அடிப்படைத் தரவுகளை சமூகநீதி சர்வே மூலம் தான் திரட்ட இயலும்.
கல்வியிலும், சமூக நிலையிலும் பின்தங்கிய நிலையில் உள்ள மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க மாநில அரசுகள் முடிவு செய்தாலும் அதை உயர்நீதிமன்றங்களும், உச்சநீதிமன்றமும் ஏற்றுக் கொள்வதில்லை. மாறாக, நவீன, நிகழ்கால, பொருத்தமான தரவுகள் (Modern, Contemporary, Pertinent Data) இருந்தால் மட்டுமே இட ஒதுக்கீடு உள்ளிட்ட சமூகநீதி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்று உச்ச நீதிமன்றமும், உயர்நீதிமன்றங்களும் கூறியுள்ளன. இத்தகைய சூழலில், அவற்றைத் திரட்டுவதற்காக தமிழ்நாட்டில் சமூகநீதி சர்வே எனப்படும் சாதிவாரி கணக்கெடுப்பை உடனே மேற்கொள்ள வேண்டும்.
2027&ஆம் ஆண்டுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக மத்திய அரசு மேற்கொள்ளவிருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டின் சமூகநீதித் தேவைகளை நிறைவேற்றுவதற்கு அந்தக் கணக்கெடுப்பில் கிடைக்கும் விவரங்கள் போதுமானவையாக இருக்காது. தேசிய அளவில் மத்திய அரசால் மேற்கொள்ளப்படும் சாதிவாரி கணக்கெடுப்பில் சாதிவாரியான மக்கள்தொகை உள்ளிட்ட சில மேக்ரோ தரவுகள் மட்டுமே இடம் பெற்றிருக்கும். அவற்றை வைத்துக் கொண்டு மாநிலங்களில் தேவைப்படும் சமூகங்களுக்கு இட ஒதுக்கீடு, வாழ்வாதார மேம்பாடு உள்ளிட்ட சமூகநீதி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது. அதனால், ஒவ்வொரு மாநிலத்தின் தேவைக்கு ஏற்ப சமூக, பொருளாதார, கல்வி கணக்கெடுப்பு மேற்கொள்ள வேண்டியது தவிர்க்கவே முடியாததாகும்.
தமிழ்நாடு உள்பட எந்த மாநிலத்திலும் சமூகநீதி சர்வே எனப்படும் சாதிவாரிக் கணக்கெடுப்பை மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு எந்தத் தடையும் இல்லை. 2008&ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்கள் சேகரிப்புச் சட்டத்தின்படி (The Collection of Statistics Act, 2008) தமிழ்நாட்டில் சமூகநீதி சர்வே எனும் சாதிவாரி கணக்கெடுப்பை தமிழக அரசால் மேற்கொள்ள முடியும். இந்த சட்டத்தின்படி சாதிவாரி சர்வே நடத்த மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு என்று பிகார், கர்நாடகம் ஆகிய மாநிலங்களின் உயர்நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்கியுள்ளன. அந்தத் தீர்ப்புகளுக்கு உச்சநீதிமன்றமும் தடை விதிக்கவில்லை.
இந்தியாவில் பிகார், தெலுங்கானா, ஒதிஷா ஆகிய மாநிலங்கள் இத்தகைய சர்வேயை நடத்தியுள்ளன. கர்நாடகம் கடந்த பத்தாண்டுகளில் இரு முறை சாதிவாரி சர்வேயை நடத்தியிருக்கிறது. பிகார், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் நடத்தப்பட்ட சமூகநீதி சர்வே எனப்படும் சாதிவாரி சர்வேக்களில் கிடைத்த தரவுகளின் அடிப்படையில் அம்மாநிலங்களில் இட ஒதுக்கீட்டின் அளவுகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், பிற சமூகநீதி நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. ஆந்திரம், ஜார்க்கண்ட் போன்ற மேலும் பல மாநிலங்களிலும் சமூகநீதி சர்வேக்கள் நடத்தப்பட்டு வருகின்றன.”