சேலம் பெரியார் பல்கலைக்கழகம்
சேலம் பெரியார் பல்கலைக்கழகம்

பெரியார் பல்கலை. பதிவாளர் தேர்வை அரசே நடத்தவேண்டும்- ராமதாஸ்

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் தேர்வில் குளறுபடிகள் இருப்பதால் அதை அரசே நடத்தவேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு புதிய பதிவாளரை தேர்ந்தெடுக்கும் நடைமுறையில் ஏராளமான விதிமீறல்களும், முறைகேடுகளும் நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பல்கலைக்கழக துணை வேந்தருக்கு விருப்பமான ஒரு பேராசிரியரை பதிவாளராக்கும் நோக்குடன் அடுத்தடுத்து விதிமீறல்கள் நிகழ்த்தப்பட்டு வரும் நிலையில், அதை அரசு கண்டும், காணாமலும் இருப்பது கவலையளிக்கிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

” பெரியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் பதவி கடந்த 2018&ஆம் ஆண்டு முதல் காலியாக உள்ளது. தொலைதூர கல்வி இயக்குனர், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் உள்ளிட்ட பதவிகளும் நீண்ட நாட்களாக நிரப்பப்படாமல் இருந்த நிலையில், அவற்றுக்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுக்கும் நோக்கத்துடன், மூன்று பொறுப்புகளுக்குமான ஆள்தேர்வு அறிவிக்கையை பல்கலைக்கழக நிர்வாகம் கடந்த ஜூலை மாதம் வெளியிட்டது. ஜூலை 17&ஆம் நாள் தொடங்கி, ஆகஸ்ட் 18&ஆம் நாள் வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. விண்ணப்பித்தவர்களில் தகுதியான சிலரை தேர்வு செய்து அவர்களுக்கு இம்மாதம் 31&ஆம் நாள் நேர்காணல் நடத்த பல்கலைக்கழக நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது. ஆனால், அறிவிக்கை வெளியிடப்பட்ட நாளில் இருந்தே, அப்பட்டமான விதிமீறல்கள் நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

உதவிப் பேராசிரியராக 10 ஆண்டுகள் பணி செய்திருந்தாலோ அல்லது இணைப் பேராசிரியராக பணி செய்து வந்தாலோ அவர்கள் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் பணிக்கு தகுதியானவர்கள் ஆவர். பல்கலைக்கழக மானியக்குழுவின் விதிகளும் இதையே வலியுறுத்துகின்றன. ஆனால், தகுதியான பலரை இந்தப் போட்டியில் பங்கேற்காமல் தடுக்கும் வகையிலும், பல்கலைக்கழக துணைவேந்தருக்கு நெருக்கமான ஒருவருக்கு போட்டியைக் குறைக்கும் நோக்குடனும் தான் பதிவாளர் பணிக்கான தகுதியாக பேராசிரியர் நிலை அறிவிக்கப்பட்டது. கல்லூரிகளில் முதல்வர்களாக பணியாற்றுவர்கள் கூட இணைப் பேராசிரியர் நிலையில் தான் இருப்பார்கள் என்பதால், பெரியார் பல்கலைக்கழகம் வகுத்த புதிய விதிகளின்படி, அவர்களும் இந்தப் போட்டியில் கலந்து கொள்ளாமல் தடுக்கப்பட்டிருக்கின்றனர்.

இது ஒருபுறமிருக்க, பதிவாளர், தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர், தொலைதூரக் கல்வி இயக்குனர் ஆகிய மூன்று பதவிகளுக்கும் ஒரே நேரத்தில் அறிவிக்கை வெளியிடப்பட்ட நிலையில், அனைத்து பணிகளுக்கும் ஒரே நேரத்தில் தான் நேர்காணல் நடத்தப்பட வேண்டும். ஆனால், தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர், தொலைதூரக் கல்வி இயக்குனர் ஆகிய பணிகளுக்கு நேர்காணல் நடத்த எந்த ஏற்பாடும் செய்யாத பல்கலைக்கழக நிர்வாகம், பதிவாளர் பணிக்கு மட்டும் அவசர, அவசரமாக நேர்காணலை நடத்த துடிக்கிறது. அதற்காகவும் பல்வேறு விதிமுறைகளை பல்கலைக்கழக நிர்வாகம் மீறியிருக்கிறது.

பதிவாளர் பணிக்கான நேர்காணலை நடத்தும் குழுவில் அரசின் பிரதிநிதி, ஆளுனரின் பிரதிநிதி, பட்டியலின பிரதிநிதி, பாட வல்லுனர் ஆகிய நால்வர் இருக்க வேண்டும். இவர்களில் அரசின் சார்பில் இன்னும் பிரதிநிதி நியமிக்கப்படாத நிலையில், அதுவரை பல்கலைக்கழக நிர்வாகம் காத்திருக்க வேண்டும். ஆனால், அரசு பிரதிநிதி இன்னும் நியமிக்கப்படாத நிலையில், அதைப் பொருட்படுத்தாமல் நேர்காணலை நடத்த முனைகிறது. இதுவும் பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிகளை மீறும் செயல் ஆகும்.

பதிவாளர் பணிக்கான நேர்காணலை நடத்த பல்கலைக்கழக நிர்வாகம் அவசரம் காட்டுவதற்கு காரணம் துணைவேந்தருக்கு நெருக்கமான ஒருவரை அப்பதவியில் அமர்த்த வேண்டும் என்பதற்காகத் தான். வேதியியல் துறையில் பேராசிரியராக பணியாற்றி வரும் விசுவநாத மூர்த்தி என்பவரை பதிவாளராக்க துணைவேந்தர் முடிவு செய்திருப்பதாகவும், அதற்கு ஏற்ற வகையில் காய்கள் நகர்த்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. பெரியார் பல்கலைக்கழக நிர்வாகத்தின் முக்கியப் பொறுப்புகளில் இருப்பவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள பல்வேறு குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், அவற்றை ஒருங்கிணைக்கும் பதிவாளர் பணியில் தங்களுக்கு நெருக்கமான ஒருவர் இருக்க வேண்டும் என்பதற்காகவே அத்தனை ஏற்பாடுகளும் திட்டமிட்டு செய்யப்படுவதாக புகார்கள் எழுந்திருக்கின்றன.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் முக்கியப் பதவிகளில் தங்களுக்கு நெருக்கமானவர்களை விதிகளை மீறி சட்டவிரோதமாக அமர்த்துவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கு முன் கடந்த ஆண்டு பல்கலைக்கழகத்தின் நூலகர், உடற்கல்வி இயக்குனர் ஆகிய பணிகளுக்கும் இதே போல் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு நெருக்கமானவர்கள் தான் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதுகுறித்து முன்கூட்டியே நான் எச்சரித்தும் கூட, அதைத் தடுக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இம்முறையும் அதேபோல் நடக்காமல் தடுக்க வேண்டிய கடமை தமிழக அரசுக்கு உள்ளது.

அந்தக் கடமையை நிறைவேற்றும் வகையில், பெரியார் பல்கலைக்கழக பதிவாளர், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர், தொலைதூரக் கல்வி இயக்குனர் ஆகிய பணிகளுக்கு விதிகளை மீறி வெளியிடப்பட்ட ஆள்தேர்வு அறிவிக்கையை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும். 3 பணிகளுக்கும் பல்கலைக்கழக மானியக் குழு நிர்ணயித்த கல்வித் தகுதியை, அடிப்படைத் தகுதியாகக் கொண்டு புதிய ஆள்தேர்வு அறிவிக்கையை வெளியிட வேண்டும். அதனடிப்படையில் பெறப்படும் விண்ணப்பங்களை ஆய்வு செய்து, நேர்காணல் நடத்தி தகுதியானவர்களை தேர்வு செய்ய இ.ஆ.ப. அதிகாரி ஒருவர் தலைமையில் அப்பழுக்கற்ற பின்னணி கொண்டவர்கள் அடங்கிய குழுவையும் தமிழக அரசு அமைக்க வேண்டும்.” என்று இராமதாசு தன் அறிக்கையில் விரிவாகக் கூறியுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com