தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் டி.என்.பி.எஸ்.சி.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் டி.என்.பி.எஸ்.சி.

’உள்ளாட்சிகளில் 2,534 பணியிடங்கள் நேரடி நியமனம்- ஊழலுக்கே வழிவகுக்கும்’

நகராட்சி நிர்வாகத் துறையில் உள்ள 2,534 தொடக்க நிலைப் பணிகளை, அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக அல்லாமல், நேரடியாக நியமிக்க அரசு முடிவுசெய்திருப்பது முறைகேடுகள் நடப்பதற்கே வழிவகுக்கும் என்று பா.ம.க. நிறுவனர் இராமதாசு கூறியுள்ளார்.

அறிக்கை ஒன்றில் இதைக் கூறியுள்ள அவர்,

”நகராட்சி நிர்வாகத்துறையின் கீழ் செயல்பட்டுவரும் 20 மாநகராட்சிகள், 138 நகராட்சிகளில் 2534 தொடக்க நிலை பணியிடங்கள் காலியாக உள்ளன. இவை அனைத்தும் டி.என்.பி.எஸ்.சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்பட வேண்டும். ஆனால், சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மூலம் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு நடத்தி பணியமர்த்த துறை முடிவுசெய்துள்ளது. அரசாணை கடந்த 14ஆம் நாள் வெளியிடப்பட்டுள்ளது.” என்றும்,

”தமிழ்நாட்டில் பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகளில் குறிப்பிட்ட வகை பணியாளர்களை தேர்வுசெய்யும் முறையில் ஊழல்கள் நடைபெற வாய்ப்புகள் இருப்பதாகக் கூறி, இனி அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், மின்சார வாரியம் உட்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றின் பணியாளர்களும் அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாகவே தேர்வுசெய்யப்படுவார்கள் என்று 2021 திசம்பரில் சட்டமும் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அந்தப் பொறுப்பு மீண்டும் உள்ளாட்சி அமைப்புகளுக்கே வழங்கப்பட்டிருக்கிறது என்றால், அதன் நோக்கம், தமிழக அரசு ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல, ஊழல் செய்வதைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?” என்றும் கூறியுள்ளார்.

”வழக்கத்திற்கு மாறாக தொடக்க நிலைப் பணிகளுக்கு நகராட்சி நிர்வாகத் துறை நேர்முகத் தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதன் நோக்கமே, அதில் ஆட்சியாளர்களுக்கு வேண்டியவர்களுக்கு அதிக மதிப்பெண்களை வழங்கத்தான். அரசாணை கடந்த நவம்பர் 14ஆம் நாள்தான் வெளியிடப்பட்டது. அடுத்தக்கட்ட பணிகள், அதற்குப் பிறகு தான் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால், அக்டோபர்  3ஆம் நாள் நகராட்சி நிர்வாகத்துறை இயக்குனர் சிவராசு முன்னிலையில் நடைபெற்ற நகராட்சி நிர்வாகத் துறை கூட்டத்தில் போட்டித் தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தைத் தீர்மானிக்க குழு அமைக்கப்பட்டிருக்கிறது. அரசாணைக்கு முன்பே நகராட்சி நிர்வாகம் இந்த விஷயத்தில் அவசரம் காட்ட வேண்டியத் தேவை என்ன?” என்றும் இராமதாசு கேள்வி எழுப்பியுள்ளார்.

டி.என்.பி.எஸ்.சியை ஒதுக்கி வைத்து விட்டு, அனுபவமே இல்லாத அண்ணா பல்கலைக்கழகம் மூலம் பணியாளர்களை தேர்ந்தெடுக்க நகராட்சி நிர்வாகம் துடிப்பதில் ஏதோ உள்நோக்கம் இருப்பதாகத்தான் தோன்றுகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.


Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com