நேரில் வந்து மூடநம்பிக்கையை முதல்வர் போக்கவேண்டும்- இராமதாஸ்

இராமதாஸ்
இராமதாஸ்
Published on

திண்டிவனம் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக உள்ள மூடநம்பிக்கையை முதல்வர் ஸ்டாலின் உடைத்தெறிய வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் இராமதாசு கேட்டுக்கொண்டுள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பல்வேறு சம்பவங்களை விவரித்துள்ளார்.

அதில், “ திண்டிவனத்தில்  2000-ம் ஆண்டு புதிதாக கட்டப்பட்ட மேம்பால திறப்பு விழா 2001-ம் ஆண்டு ஜனவரி மாதம் 7-ம் தேதி முதல்வர் கருணாநிதி திறந்துவைத்தார். இம்மேம்பாலம் அமைய காரணமான மத்திய தரைவழி போக்குவரத்துத்துறை அமைச்சர் டி.ஜி.வெங்கட் ராமனின் அரசியல் வாழ்க்கை அஸ்தனமனமானது. அதைத் தொடர்ந்து திண்டிவனத்தில் 1971-ம் ஆண்டில் இந்திரா காந்தி பேருந்து நிலையம் திண்டிவனத்தின் வளர்ச்சி மற்றும் போக்குவரத்து பெருக்கத்தின் காரணமாக இந்த பேருந்து நிலையம் பயன்பாடின்றி போனது.  பின்னர் 1991-ம் ஆண்டு, ‘திண்டிவனத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும்’ என அப்போதைய தென்னாற்காடு மாவட்ட ஆட்சியர் கரியாலி அறிவித்தார். இதனை தொடர்ந்து அவர் பணிமாறுதல் செய்யப்பட்டார். அதோடு பேருந்து நிலைய பணிகள் நின்றுபோயின.” என்று குறிப்பிட்டுள்ளார்.  

மேலும், ”2001-ம் ஆண்டு அப்போதைய திண்டிவனம் எம்.எல்.ஏ.வும் அமைச்சருமான சி.வி.சண்முகம் வக்ஃபு வாரிய இடத்தில், புதிய பேருந்து நிலையம் அமைக்க முயன்றார். அதற்கு அப்போதைய அதிமுக நகர்மன்றத் தலைவர் ஹீராசந்த் எதிர்ப்பு தெரிவித்தார். இதன்பின், 2005-ம் ஆண்டு வக்ஃபு வாரியத்துக்கு சொந்தமான இடத்தில் பேருந்து நிலையம் அமைக்க முன்பணமாக 6 லட்சம் ரூபாய், மாதம் 60 ஆயிரம் ரூபாய் வாடகை, ஆண்டுக்கு 5 சதவீதம் வாடகையை உயர்த்தி கொள்ளலாம் என அப்போது அதிமுக நிர்வகித்து வந்த திண்டிவனம் நகராட்சி சார்பில் ஒப்பந்தம் போடப்பட்டது. பின்னர் 30-12-2005-ம் தேதி, தற்காலிக பேருந்து நிலையம் திறக்கப்பட்டு 33 நாட்கள் இயங்கின. பின்னர் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்ததால், தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.” என்றும், 

இதனைத் தொடர்ந்து கடந்த 2017-ம் ஆண்டு நகராட்சி சார்பில் பொதுமக்களிடம் இப்பகுதியில் புதிய பேருந்துநிலையம் அமைக்கலாமா என்று கருத்து கேட்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அப்போதைய நகராட்சித் தலைவர் கே.வி.என்.வெங்கடேசன் சார்பில், 12.10.2009-ம் தேதி நகராட்சி வெளியிட்ட அரசாணையில், ‘திண்டிவனம் ஏரி பகுதியில் பேருந்துநிலையம் அமைக்க கவனம் செலுத்தப்பட்டு, ஓராண்டுக்குள் கட்டிமுடித்து முதல்வர் ஜெயலலிதா பெயரில் திறக்கப்படும்’ என்றுதெரிவிக்கப்பட்டது.


அதன்பிறகு, 2011-ம் ஆண்டு சட்டப்பேரவையில் பேசிய அப்போதைய திண்டிவனம் எம்.எல்.ஏ., ஹரிதாஸ், நீண்ட காலமாக இழுத்தடிக்கப்பட்டு வரும் திண்டிவனம் புதிய பேருந்து நிலையம் பற்றி பேசி, உடனே இது அமைக்கப்படவேண்டும் என்றார். அதோடு அவரின் அரசியல் வாழ்வு அஸ்தனமனமாதாக மூடநம்பிக்கை வலுபெற்றது. இதனை தொடர்ந்து 10 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சியில் இருந்த அதிமுக அரசு திண்டிவனம் பேருந்து நிலையம் என்ற பேச்சையே எடுக்கவில்லை.

இந்நிலையில், கடந்த 2023-ம் ஆண்டு 6 ஏக்கர் பரப்பளவில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் அமைச்சர் மஸ்தான் அடிக்கல் நாட்டினார். 2024-ம் ஆண்டு நவம்பர் 22-ம் தேதிவரையில் 85 சதவீதப்பணிகள் முடியும் நிலையில் இருந்தபோது . மஸ்தானின் கட்சிப்பதவி, அமைச்சர் பதவி பறிபோனதாக மேலும் மூடநம்பிக்கை வலுபெற்றது. 

இதனால் திண்டிவனத்தில் வளர்ச்சிப்பணிகள் என்றாலே அதிகாரத்தில் உள்ளவர்கள் அலறி அடித்து ஓடும் நிலை என்ற முடநம்பிக்கை வேறுன்றிபோனது.  இந்நிலையில் கடந்த டிசம்பர் 15-ம் தேதி திண்டிவனம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு செய்த கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் திண்டிவனம் நகராட்சி பேருந்து நிலையம், திண்டிவனம் தலைமை மருத்துவமனை ஆகியவற்றை நேரிலோ, காணொளி மூலமோ திறந்துவைக்க வாய்ப்பு உள்ளது என்றார்.

இந்நிலையில் முண்டியம்பாக்கத்தில் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திண்டிவனத்தில் மேம்படுத்தப்பட்ட மாவட்ட தலைமை மருத்துவமனையை காணொளி வாயிலாக வருகின்ற 5-ம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்துவைப்பார் என தெரிவித்தார். அதே நாள் திண்டிவனம் அருகே தீவனூரில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்கும் முதல்வர் திறப்பு விழாவிற்கு தயாராக உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனை மற்றும் திண்டிவனம் பேருந்து நிலையத்தை நேரில் வந்து திறந்துவைத்து, மூடநம்பிக்கைக்கு முடிவுகட்டி, பகுத்தறிவு பாதையில் தொடரும் இயக்கம் திமுக என்பதை மெய்பிக்க வேண்டும்.” என்றும் இராமதாசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

logo
Andhimazhai
www.andhimazhai.com