
பா.ம.க. எங்களுடன் கூட்டணி சேர்ந்துள்ளது என்று எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்துள்ளார்.
சென்னையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் வீட்டில் எடப்பாடி பழனிசாமியுடன் பா.ம.க. தலைவர் அன்புமணி சந்தித்துப் பேசினார்.
சுமார் 20 நிமிடத்துக்கு மேல் இச்சந்திப்பு நீடித்தது.
பின்னர் பழனிசாமியும் அன்புமணியும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, “ சட்டமன்றத் தேர்தலில் ஏற்கெனவே அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி அமைத்துவிட்டது. தற்போது பா.ம.க. எங்கள் கூட்டணியில் இணைந்து, மூன்று கட்சிகள் கூட்டணியில் இடம்பெற்றுள்ளன. மேலும், சில கட்சிகள் விரைவில் சேரும். எங்கள் கூட்டணி இயற்கையான கூட்டணி. வரக்கூடிய தேர்தலில் தி.மு.க. ஆட்சியை அகற்றவேண்டும் என்ற இலட்சியத்தின் அடிப்படையில், வலிமையான தமிழகத்தை உருவாக்க, மக்களுக்குத் தேவையான திட்டங்களைக் கொடுக்கும் அரசாக அமைய, எங்கள் கூட்டணி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று, அ.தி.மு.க. தனிப் பெரும்பான்மை ஆட்சி அமைக்கும். பா.ம.க.வுடன் தொகுதிகளின் எண்ணிக்கையை முடிவுசெய்துவிட்டோம். மற்றதைப் பின்னர் அறிவிப்போம்.” என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
அதை அன்புமணி ஆமோதித்தார்.