முறைப்படி அனுமதி பெற்று தான் குவாரி நடத்துகிறோம்: முன்னாள் அமைச்சர் மூர்த்தி

Former DMK Minister Moorthy
முன்னாள் அமைச்சர் மூர்த்தி
Published on: 

முன்னாள் தி.மு.க. அமைச்சர் மூர்த்தியின் வீட்டில், இன்று மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஆட்சியில், வணிக வரி - பதிவுத் துறை அமைச்சராக இருந்த இவர், மதுரை அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளில் உள்ள செம்மண், கல் குவாரிகளில் விதிகளை மீறி செம்மண், கற்களை வெட்டி எடுத்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து, இன்று காலை முதல் போலீசார் அவரது வீடு, அவரின் உறவினர்களின் வீட்டிலும் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து, மதுரையில் செய்தியாளர்களிடம் முன்னாள் தி.மு.க. அமைச்சர் மூர்த்தி அளித்த பேட்டி:

"இந்தப் புகாரில் உண்மை ஏதும் இல்லை. இது ஏற்கனவே முறையாக அனுமதிப் பெற்று நடந்துகொண்டிருக்கிறது. இதனை நாங்கள் சட்டரீதியாக எதிர்கொள்வோம்.

குவாரியை பொறுத்தவரையில், கடந்த 2019ஆம் ஆண்டு மாவட்ட ஆட்சியரிடம் அனுமதிப் பெற்றுதான் ஒப்பந்தத்திற்கு கொடுத்துள்ளோம். அதைத்தவிர, அங்கு என்ன நடைப்பெற்றது என்று எனக்கு ஒருபோதும் தெரியாது. மற்றப்படி, நான் எதுவும் சட்டத்திற்கு புறம்பாக எந்த செயலிலும் ஈடுபடவில்லை." என்று மூர்த்தி தெரிவித்தார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram