
கடலூரில், காவலரை தாக்கிவிட்டு தப்பிக்க முயன்ற கஞ்சா வியாபாரியை போலீசார் சுட்டு பிடித்துள்ளதாகக் கூறி உள்ளனர்.
மிழகம் முழுவதும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனைக்கு எதிராக காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். எனினும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் புழக்கம் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பாலியல் வன்கொடுமை, கொலை, கொள்ளை என குற்ற செயல்களும் அதிகரித்து வருகின்றன.
இந்த சூழலில் கடலூரில் கஞ்சா வியாபாரி ஒருவரை போலீசார் சுட்டு பிடித்துள்ளனர்.
சிதம்பரம் அண்ணாமலை நகர் பகுதியில் கஞ்சா புழக்கம் அதிகமாக இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனால், நேற்று போலீசார் வாகனத் தணிக்கை சோதனையை தீவிரப்படுத்தினர்.
இந்த நிலையில் சிதம்பரம் நகரப் பகுதியில் இருக்கும் ஒரு பேருந்து நிலையத்துக்கு சந்தேகத்திற்கிடமாக மூன்று பேர் வந்துள்ளனர். அவர்களில் ஒருவர் தப்பித்து ஓட ஸ்ரீராம் மற்றும் சந்துரு ஆகிய இருவர் மட்டும் பிடிபட்டனர். இவர்களிடம் கஞ்சா இருந்துள்ளது. தப்பியோடியவர் நவீன் என்பதும் அவர் கஞ்சா வியாபாரி என்பதும் தெரியவந்தது.
அவரை போலீசார் வலைவீசி தேடி நேற்றிரவு கைது செய்தனர். இதைத்தொடர்ந்து பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கஞ்சாவை கைப்பற்றுவதற்காக நவீனை அழைத்துச் சென்றபோது அவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் காவலர் ஐயப்பன் என்பவரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றதாக தகவல்கள் வருகின்றன.
அப்போது காவல் ஆய்வாளர் நவீனை எச்சரித்துள்ளார். எனினும் நவீன் தாக்குதலில் ஈடுபட்டதால் அவரை சுட்டுப் பிடித்ததாக அண்ணாமலை நகர் போலீசார் கூறுகின்றனர்.
தற்போது, தாக்குதலுக்கு உள்ளான காவலர் அயப்பனும் கால் முட்டியில் குண்டடிபட்ட நவீனும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.